திமுக எம்பி ஆ ராசா 2004-2007 காலத்தில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த சமயத்தில் பினாமி நிறுவனத்தின் பெயரில் கோவை மாவட்டத்தில் வாங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் ரூ.55 கோடி மதிப்பிலான 45 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர்.
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர் ஆ ராசா. இவர் திமுகவின் துணை பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். மேலும் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியின் எம்பியாக உள்ளார். இவர் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக இருந்தார். கடந்த 2004 முதல் 2007 வரை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக ஆ ராசா செயல்பட்டார். அதன்பிறகு 2007 முதல் 2009 வரை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தார். இந்நிலையில் தான் தற்போது கோவை மாவட்டத்தில் ஆ ராசாவுக்கு சொந்தமான ரூ.55 கோடி மதிப்பிலான 45 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை முடக்கம் செய்துள்ளது. பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கையை அமலாக்கத்துறை மேற்கொண்டுள்ளது.
இதுபற்றி அமலாக்கத்துறை தரப்பில் முக்கிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி கடந்த 2004 முதல் 2007 காலக்கட்டத்தில் ஆ ராசா மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தார். இந்த வேளையில குர்கிராமில் செயல்பட்டு வரும் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்க வேண்டி இருந்தது. இந்த விவகாரத்தில் கைமாறிய லஞ்சப்பணத்தில் முறைகேடாக கோவையில் நிலம் வாங்கப்பட்டுள்ளதாகவும், இந்த நிலம் ஆ ராசா தொடர்புடைய பினாமி நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தான் தற்போது அந்த நிலம் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 1999 முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 575 சதவீதம் என்ற அளவில் ரூ.27 கோடியே 92 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கடந்த 2015ல் சிபிஐ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக சென்னை, கோவை உள்பட ஆ ராசா தொடர்புடைய பல இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதுதொடர்பான வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஜனவரியில் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. இதற்கிடையே தான் 2004-2007 காலகட்டத்தில் மத்திய மந்திரியாக ஆ.ராசா இருந்த போது பினாமி நிறுவனத்தின் பெயரில் கோவையில் வாங்கப்பட்ட ரூ.55 கோடி மதிப்புள்ள 45 ஏக்கர் நிலத்தை மத்திய அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.