திமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் மஸ்தான் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவரும், திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவுச் செயலாளருமான டாக்டர் மஸ்தான் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார்.
அதிமுகவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக டாக்டர் மஸ்தான் 1995ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், 2001ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றினார்.
இதனை அடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திமுகவில் இணைந்தார் . அவருக்கு திமுகவில் சிறுபான்மை நல உரிமை பிரிவு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பின்பு பல்வேறு வாரியங்கள், ஆணையங்களில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ் நியமிக்கப்பட்ட நிலையில் துணைத் தலைவர் பதவி டாக்டர் மஸ்தானுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலை காரில் சென்னையை அடுத்த ஊரப்பாக்கம் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த போது டாக்டர். மஸ்தானுக்கு நெஞ்சு வழி ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விடுத்த இரங்கல் செய்தியில்கூறியுள்ளதாவது:-
முன்னாள் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவருமான டாக்டர் மஸ்தான் மறைவெய்தினார் என்ற துயர்மிகு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் மீது தனி மரியாதையும், பற்றும் பாசமும் மிகுந்தவராக தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்துடன் பயணித்து வந்த டாக்டர் மஸ்தான் அவர்கள் என்றைக்கும் இயக்க உணர்வை நெஞ்சில் ஏந்தி பணியாற்றிய செயல்வீரர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவுச் செயலாளராக – அந்த அணியின் பணி சிறக்க தன்னை முழு மூச்சாக அர்ப்பணித்துக் கொண்டவர்.
இப்தார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து மிகச் சிறப்புற நடத்துவதில் அவருக்கு நிகர் அவரே!சிறுபான்மையினர் நலன் மட்டுமின்றி, அனைத்துச் சமுதாய நலனிற்காகவும் முன்னின்று செயலாற்றும் ஒப்பற்ற ஒரு களப் பணியாளரை இன்றைக்கு நான் இழந்து தவிக்கிறேன். அண்ணா அறிவாலயம் செல்கின்ற நேரங்களில் எல்லாம் அங்கே நின்று என்னை இன்முகத்துடன் வரவேற்பவர். சில நாட்களுக்கு முன்புதான் என்னை இல்லத்தில் நேரில் சந்தித்து தனது மகனின் நிச்சயதார்த்தத்திற்கு அன்போடு அழைத்தார். மனித நேயராக, சமூக சேவகராக – தீவிர கழகத் தொண்டராக பணியாற்றிய டாக்டர் மஸ்தான் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் – கழகத்தினருக்கும் – சிறுபான்மையினச் சகோதர, சகோதரிகளுக்கும் எனது அனுதாபத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.