சீனாவில் வேகமாக பரவி வரும் பிஎப் 7 ஓமிக்ரான் உருமாறிய வைரஸ் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி சுகாதாரத்துறை உயர்நிலை குழுவுடன் தீவிர ஆலோசனை நடத்தி பொதுமக்களுக்கும், மாநில அரசுகளுக்கும் பல்வேறு முக்கிய விஷயங்களை கூறியுள்ளார்.
கடந்த 2019 இறுதியில் சீனாவில் இருந்து புறப்பட்ட கொரோனா வைரஸ் கடந்த இரண்டரை ஆண்டுகளாக இந்தியா உள்பட ஒட்டுமொத்த உலகத்தையும் முடக்கி போட்டது. அதன்பிறகு கடந்த 8 மாதமாக இந்தியா உள்பட பல நாடுகளில் கொரோனா பாதிப்பு என்பது படிப்படியாக குறைந்து வந்தது. இந்நிலையில் தான் தற்போது சில நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயர தொடங்கி உள்ளது. அதன்படி சீனா, ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சீனாவில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாக சர்வதேச செய்தி ஊடகங்கள் கூறி வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் அங்கு ஓமிக்ரானின் உருமாறிய BF.7 வகை வைரஸ் பரவல் தான். இந்த வைரஸ் பரவலால் சீனா அதிக பாதிப்புகளை சந்திக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே தான் இந்தியாவில் குஜராத் மற்றும் ஒடிசாவை சேர்ந்த தலா 2 பேர் என மொத்தம் 4 பேருக்கு பிஎப்.7 ஓமிக்ரான் உருமாறிய வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் இந்தியாவிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் கைவிடப்பட்ட கொரோனா பரிசோதனைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி விமான நிலையத்தில் 2 சதவீத பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்வது துவங்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா தலைமையில் ஆலோசனை நடந்த நிலையில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் சுகாதாரத்துறை உயர்நிலை குழு ஆலோசனை கூட்டம் மாலையில் நடந்தது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா, சுகாதாரத்துறை அதிகாரிகள், நிதி ஆயோக் உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் இந்தியாவில் புதிய வகை கொரோனா பரவாமல் தடுக்க என்னென்ன கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும் என்பது பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும் கட்டுப்பாடுகளை உடனடியாக கொண்டு வரலாமா அல்லது படிப்படியாக கொண்டு வரலாமா? புதிய வகை கொரோனாவை சமாளிக்க மருத்துவமனைகள் தயாராக இருக்கிறதா? ஆஸ்பத்திரியில் பணியாற்றும் மருத்துவர்கள், நர்சுகள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுள்ளார்களா? என்பது பற்றியும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்திலும் பொது இடங்களில் மாஸ்க் கட்டாயமாக்கப்படவில்லை. தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு என்பது 200க்குள்ளாக தான் உள்ளதால் மாஸ்க் கட்டாயமாக்க வேண்டாம் என கூறப்பட்டது. இருப்பினும் பாதிப்பு உயர்ந்தால் மாஸ்க் கட்டாயமாக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியதாக சொல்லப்படுகிறது. மேலும் தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதால் பயணக்கட்டுப்பாடு உள்பட பிற முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இருப்பினும் கூட அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது. முக்கியமாக சீனா உள்ளிட்ட கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். உருமாறும் வைரஸ் தொடர்பான ஆய்வுகளை தீவிரப்படுத்தி அதற்கான முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.
இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய அறிவுரைகளை பிரதமர் மோடி பொதுக்களுக்கு வழங்கி உள்ளார். அதன்படி கூட்ட நெரிசல் மிக்க இடங்களில் பொதுமக்கள் மாஸ்க் அணிய வேண்டும். கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை காலங்கள் வருவதால் பொதுமக்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என அறிவுரை வழங்கி உள்ளார். இதுதவிர மாநில அரசுக்கு பல்வேறு முக்கிய அறிவுரைகளை பிரதமர் மோடி வழங்கி உள்ளார். அதன்படி மாநிலங்களில் ஆக்சிஜன் சிலிண்டர், வென்டிலேட்டர்களை தயாராக வைத்திருக்க வேண்டும். அத்தியாவசிய மருந்துகளின் இருப்பு, விலை நிலவரத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். கொரோனா வைரஸின் மரபணு சோதனைகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். அதோடு தினசரி மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த மத்திய அரசு சார்பில் மாநிலங்களுக்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.