சீனாவும் பாகிஸ்தானும் ஒன்றிணைந்து செயல்பட தொடங்கிவிட்டதாக ராகுல் காந்தி பேசியுள்ளார்.
வருகிற 2024ம் ஆண்டு இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலை எதிர்கொள்ளவுள்ள காங்கிரஸ் கட்சி இப்போதே அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளது. அதன் ஒருபகுதியாக, கட்சியை வலுப்படுத்தவும், தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ (பாரதமே ஒன்றிணைவோம்) என்ற பெயரில் 3,500 கிலோ மீட்டர் தூரம், 150 நாட்கள் பாதயாத்திரை மேற்கொள்கிறார் அக்கட்சியின் முன்னாள் அகில இந்திய தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி. தமிழ்நாட்டில் தொடங்கிய ராகுல் காந்தியின் பாதயாத்திரை, கேரளா, கர்நாடகா வழியாக காஷ்மீர் வரையில் பாதயாத்திரை மேற்கொள்கிறார். ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் கூட்டணி கட்சியினர், பொதுமக்கள், காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்டு வருகின்றனர். இந்தியா மட்டுமல்லாது உலக அளவிலும் ராகுல் காந்தியின் பாத்யாத்திரை பேசு பொருளாகியுள்ளது.
கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் பாதயாத்திரை தற்போது டெல்லியில் நுழைந்துள்ளது. இந்தநிலையில் டெல்லியில் நேற்று ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுடன் ராகுல் காந்தி உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:-
சீனாவும் பாகிஸ்தானும் தற்போது ஒன்று சேர்ந்து விட்டது. எதிர்பாராத விதமாக போர் வந்தால் நமது நாடு மிகப்பெரிய பாதிப்புகளை சந்திக்க நேரிடும். மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடாக இந்தியா உள்ளது. எனக்கு உங்கள் மீது மரியாதை மட்டும் இல்லை. அதோடு அன்பும் உள்ளது. நீங்கள் தான் நாட்டைக் காத்து வருகின்றனர். நீங்கள் இல்லாமல் இந்தியா இல்லை. முன்னதாக நமக்கு சீனா, பாகிஸ்தான் என இரண்டு எதிரிகள் இருந்தனர். அவர்களை பிரித்தே வைத்திருப்பதை நமது வெளியுறவுக் கொள்கை உறுதி செய்தது. ஆனால் தற்போது இரு நாடுகளும் ஒன்று சேர்ந்து விட்டன. போர் வந்தால் இருநாடுகளும் ராணுவ ரீதியில் மட்டுமில்லாது பொருளாதார ரீதியிலும் ஒன்றிணைந்து செயல்படும்.
2014க்கு பிறகு நமது நாட்டின் பொருளாதாரம் சரியத் தொடங்கியுள்ளது. நமது நாட்டில் தற்போது ஒற்றுமை இல்லை. குழப்பம், வெறுப்பு, சண்டை ஆகியவையே உள்ளது. இந்தியா மிகப்பெரிய ஆபத்தை சந்திக்க உள்ளது. சீனாவும், பாகிஸ்தானும் தற்போது ஒன்றிணைந்து செயல்பட தொடங்கிவிட்டன. அதனால் தான் தீவிர நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
எல்லையில் என்ன நடக்கிறது என்பதை மக்களுக்கு சொல்ல அரசு கடமைபட்டுள்ளது. சீன விவகாரத்தில் 5 வருடங்களுக்கு முன்பே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் மத்திய பாஜக அரசு அதை செய்யவில்லை. துரிதமாக நாம் செயல்படவில்லை என்றால் நமக்கு தான் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படும். அருணாச்சல் பிரதேஷ் மற்றும் லடாக்கில் என்ன நடக்கிறது என்பதை நான் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் நினைவிடத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி நினைவிடத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார். ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடம், சாந்தி வேனில் உள்ள முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைவிடம், முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு சக்தி ஸ்தலத்திலும், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு வீர் பூமியிலும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.