ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக வழங்கப்படும் 33 திட்டங்களில் 20 திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்றும், ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்தாமல் தமிழக அரசு வீணடிப்பதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
மாநிலம் முழுவதும் உள்ள, சமூகத்தில் பின் தங்கிய வகுப்புகளில் இருக்கும் மாணவர்களில் நூற்றுக்கணக்கானோர், ஒவ்வொரு வருடமும், எப்படியாவது சமுதாயத்தில் முன்னேறி விட வேண்டும் என்ற நோக்கத்துடன், பட்டப்படிப்பிற்காகவும், பட்ட மேற்படிப்பிற்காகவும், தலைநகர் சென்னைக்கு வருகிறார்கள்.
தமிழக அரசின் ஆதி திராவிட நலத்துறையால் நடத்தப்படும். மாணவர் விடுதிகளில், அந்த மாணவர்கள், அடிப்படை வசதிகளுக்கே போராட வேண்டிய அவல நிலையில் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. மாணவர்கள் விடுதிக் கூரை, மழைக்காலங்களில் ஒழுகுவதாகவும், சரியான குடிநீர் கிடைக்காமலும், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவில் புழுக்கள் நெளிவதாகவும் விடுதி மாணவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
கடந்த மழைக் காலத்தில், மழைநீர் விடுதியின் உள்ளே புகுந்ததால், மாணவர்கள் தூங்குவதற்கு இடமில்லாமலும், நோய்த் தொற்றுகளுக்கும் உள்ளாகியிருக்கிறார்கள் என்ற செய்தி மனதை உலுக்குகிறது. மேலும், ஆதி திராவிடர் நலத்துறையால், விடுதி மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கட்டில், போர்வை, தலையணை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட வழங்கப்படவில்லை என்று வேதனை தெரிவித்திருக்கிறார்கள். இதுமட்டுமல்லாது, மாணவர்களுக்கு, மாதாமாதம் இதர செலவாக வழங்கப்பட வேண்டிய ரூ.150ம் வழங்கப்படவில்லை என்றும், அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இது வரை நடவடிக்கை எதுவும் இல்லை என்றும் மாணவர்கள் வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார்கள்.
ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பாக வழங்கப்படும் 33 நலத்திட்டங்களில் 20 நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. சென்ற ஆண்டு ஆதி திராவிடர் நலனுக்காக ரூ.4,099 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் 20 நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் முடக்கி, ஒதுக்கப்பட்ட நிதியை வீணடித்துள்ளார். அதேபோல் சென்ற ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டும் ரூ.757 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆனால் ஆதிதிராவிடர் விடுதிக்கு செலவிடாதது ஏன் என்ற கேள்விக்கு திறனற்ற திமுக அரசு பதில் அளிக்க வேண்டும். கல்வி, வீட்டு வசதி திட்டங்கள், வேலைவாய்ப்பு, நூலகங்கள், மாணவர் விடுதிகள் போன்ற அடிப்படை தேவைகள் பல நிறைவேற்றப்படாமல் இருக்க, அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியையும் முழுவதுமாக பயன்படுத்தாமல் இருப்பது, திறனற்ற திமுக அரசின் மெத்தனத்தையும், சமுதாயத்தில் பின் தங்கி இருக்கும் மாணவர்கள் மீதான கடும் அலட்சிய போக்கையும் காட்டுகிறது. ஆனால் அரசியல் மேடைகளில் சமூக நீதி நாடகம் அரங்கேற்ருவது திமுகவின் போலி வேஷத்தையே வெளிப்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.