கோவை மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்து புதிய பணிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டிய நிலையில், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி உதயநிதியை மாமன்னர் ராஜேந்திர சோழனோடு ஒப்பிட்டு பேசினார்.
பல மாத எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் கடந்த 14ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழகத்தின் புதிய அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அமைச்சராக பதவி ஏற்று கொண்ட சிறிது நேரத்திலேயே உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை ஒதுக்கப்பட்டு இருந்தது. தற்போது மாநிலம் முழுவதும் விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட இருக்கும் நிலையில், உதயநிதி அத்துறைக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டார். நேற்று முன்தினம் திண்டுக்கல்லில் ஐந்துக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கட்சியினருக்கும் பொதுமக்களுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை உதயநிதி வழங்கினார். நேற்று கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதற்கான ஏற்பாடுகளை அம்மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான தமிழக மின்சார துறை பொறுப்பு வகிக்கும் செந்தில் பாலாஜி செய்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உதயநிதி கலந்து கொண்டார். கோவை கொடிசியா மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று 20 துறைகளின் சார்பில் சுமார் 25 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி, “முதல்வரையும் திராவிட மாடல் ஆட்சியையும் மக்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள். விளையாட்டு துறை கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் என்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். கலைஞர் பேரன், முதல்வரின் மகன், மாண்புமிகு அமைச்சர் என எவ்வளவோ பெறுமைகள் இருந்தாலும் உங்கள் வீட்டு செல்லப்பிள்ளை என்பது தான் எனக்கு பெறுமை. உங்கள் வீட்டு செல்லப்பிள்ளையை விட பொறுப்பான செல்லப்பிள்ளையாக இருப்பேன்” என தெரிவித்தார்.
மேலும் கோவை மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்து புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வைத்தார். முன்னதாக விழாவில் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, “ராஜராஜசோழன் ராஜேந்திர சோழனை பெற்று சான்றோனாக்கினார். அதுபோல் சின்னவரை பெற்று சான்றோனாக்கியுள்ளார் தளபதி. கடந்த ஆண்டுகளில் பெற்ற வளர்ச்சியை விட இந்த ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பு வளர்ச்சி பெறும், அன்னூர் தொழிற்பூங்கா அமைப்பது தொடர்பாக அரசியல் கட்சியினர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்” என்றார்.