நான் இருக்கும் வரை பரந்தூரில் செங்கல் கூட வைக்க முடியாது: சீமான்

வாரிசு அரசியல் பற்றி ஸ்டாலின் அன்று பேசியதற்கு மாறாக எப்படி இப்போது செயல்படுகிறாரோ, அதேபோல் பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

வேலு நாச்சியாரின் நினைவு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் சார்பில் போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் அலுவலகத்தில் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு வேலுநாச்சியாரின் உருவப்படத்திற்கு மலர் தூது வீரவணக்கம் செலுத்தினார். இதனைத் தொடர்ந்து சீமான் செய்தியாளர்களை சந்தித்த போது, பாரத் ஜோடோ யாத்திரையில் கமல்ஹாசன் கலந்துகொண்டது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சீமான், யாத்திரை செல்வதால் மாற்றம் வந்துவிடும் என்றால், 5 ஆண்டுகளுக்கு முன்னதாகவே யாத்திரை சென்றிருக்கலாம். அரசியல் புரட்சி மூலமாகவே அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். பண மதிப்பிழப்பு விவகாரத்தை தவிர்த்து, அனைத்து பிரச்சினைகளையும் காங்கிரஸ் கட்சியே தொடங்கி வைத்துள்ளது. அதனால் காங்கிரஸ் கட்சியால் எந்த பிரச்சினையையும் மக்களிடம் கொண்டு செல்ல முடியவில்லை. எதையும் மக்களிடம் பேச முடியாது என்பதால், காங்கிரஸ் பாஜகவை கண்டு அஞ்சுகிறது. பாஜக காங்கிரஸ் கட்சியை கண்டு பயப்படுகிறது. இவை இரண்டும் தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சியை கண்டு அஞ்சுகின்றன. டெல்லியில் கூட்டிய கூட்டத்தை விடவும், தமிழகத்தில் என்னால் அதிக கூட்டத்தை கூட்ட முடியும். ஸ்டாலினுக்கு நமக்கு நாமே போல், ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை. இருவருக்கும் ஐடியா கொடுத்தது ஒருவர் தான் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து வாரிசு இசை வெளியீட்டு விழாவில் தனக்கு போட்டி தான் மட்டுமே என்று நடிகர் விஜய் பேசியது குறித்த கேள்விக்கு, தனக்கு போட்டி என்று வேறு யார் பெயரையாவது குறிப்பிட்டால், என்ன நடக்கும். இது ஒரு பாதுகாப்பான விளையாட்டாக பார்க்கிறேன். நடிகர் விஜய்யின் முதிர்ச்சியை பாராட்டுவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து ராமராஜ்ஜியத்தை யாரும் புரிந்துகொள்ளவில்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிய கருத்து குறித்த கேள்விக்கு, இந்தியாவை ஆளுநர் ஆர்.என்.ரவி சரியாக புரிந்துகொள்ளவில்லை. ராமராஜ்ஜியத்தில் வழிபாட்டு தளங்களை இடித்துவிட்டு கோயில் கட்ட வேண்டும் என்று இருக்கிறதா, ராமராஜ்ஜியத்தை நிறுவப்போவது யார், இதே ஆர்எஸ்எஸ், பாஜக தானே. கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக பாஜக ஆட்சி தானே இந்தியாவில் நடந்து வருகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநராக இருந்தாலும் அவரும் ஆர்எஸ்எஸ்-காரர் தான் என்று தெரிவித்தார்.

பின்னர் புதிய கல்விக் கொள்கை மூலம் தாய் மொழி வளர்ச்சி அடையும் என்ற அமித் ஷாவின் கருத்து குறித்த கேள்விக்கு, யாரின் தாய் மொழி என்பது சொல்லவில்லை. புதிய கல்விக் கொள்கையில் தாய் மொழியை பயிற்று மொழியாக 8ம் வகுப்பு வரையிலேயே வரையறுத்திருக்கிறார்கள். தமிழ் மொழி கடல் போன்றது. தமிழ் மொழி பேசுவதாக கூறிவிட்டு, மோடி சமஸ்கிருதம் பேசிக் கொண்டிருக்கிறார். பள்ளிக் கூடங்கள் கட்ட பணமில்லாமல், தமிழக அரசு கையேந்தி நிற்கிறது. சொந்தமாக விமானம் இல்லாத நாட்டுக்கு, எதற்கான விமான நிலையம் என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து வாரிசு அரசியலை பற்றி முதலமைச்சர் ஸ்டாலின் குரலில் பேசிய சீமான், என் வீட்டில் என் மருமகனோ, மகனோ யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று பேசி இருக்கிறார். ஆனால் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுத்துள்ளார். அதேபோல் பரந்தூரில் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்திருக்கிறார்கள். இன்று விமான நிலையம் அமைக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் பரந்தூரில் ஒரு செங்கல் கூட நான் இருக்கும் வரை வைக்க முடியாது. பரந்தூர் விமான நிலையம் மூலம் ஊழல் செய்யவே திமுக வேகமாக நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தெரிவித்தார்.