ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரையில் இணைய குலாம் நபி ஆசாத்துக்கு அழைப்பு!

ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை யாத்திரை விரைவில் ஜம்மு காஷ்மீருக்கு வர உள்ளதால், அதில் பங்கேற்க குலாம் நபி ஆசாத்துக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

ராகுல் காந்தி எம்.பி. இந்திய ஒற்றுமை யாத்திரையை கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், குஜராத், ராஜஸ்தான், அரியானா என பல்வேறு மாநிலங்கள் வழியாக நடைபயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, தலைநகர் டெல்லியை கடந்த வாரம் வந்தடைந்தார். இதையடுத்து, கடந்த 25ம் தேதி முதல் வரும் ஜனவரி 2-ம் தேதி வரை யாத்திரைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 3-ம் தேதி யாத்திரை மீண்டும் தொடங்க உள்ளார். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் பங்கேற்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்த யாத்திரை ஜம்மு காஷ்மீருக்குச் செல்லும்போது அதில் பங்கேற்குமாறு குலாம் நபி ஆசாத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரிகளான பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அவர்களும் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் ராகுல்காந்தி குடும்பத்துக்கு நெருக்கமானவருமான அம்பிகா சோனி மூலம் குலாம் நபி ஆசாத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதலில் இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்குமாறும், அப்போது ராகுல் காந்தியிடம் நேரடியாக பேசுமாறும் குலாம் நபி ஆசாத்தை அம்பிகா சோனி கேட்டுக்கொண்டுள்ளார். இதையடுத்து, காங்கிரஸில் மீண்டும் இணைவது குறித்து முடிவு எடுக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். எனினும், தான் தொடங்கி உள்ள ஜனநாயக சுதந்திர கட்சி மாநிலத்தில் நல்ல வளர்ச்சி பெற்றுள்ளதாகவும், காங்கிரசில் மீண்டும் இணைய வாய்ப்பு இல்லை என்றும் குலாம் நபி ஆசாத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.