கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் சென்ற கார் உத்தர்காண்ட் ஹம்மத்பூர் ஜால் பகுதியில் கார் விபத்துக்குள்ளானது. இதில் ரிஷப் பந்த் படுகாயமடைந்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ரிஷப் பந்த், டெல்லியில் இருந்து அவரது சொந்த ஊரான உத்தரகாண்டிற்கு சென்று கொண்டிருந்தார். கார் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை உத்தரகாண்ட் மாநிலம், ஹம்மத்பூர் ஜால் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு மீது கார் மோதி தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. இதில், கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் முதுகு மற்றும் தலையில் பலத்த காயம் அடைந்தார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ரிஷப் பந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்படு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையே ரிஷப் பந்த் கார் வேகமாக வந்து விபத்துக்குள்ளாவதும், உள்ளூர் வாசிகள் அவருக்கு முதலுதவி செய்வதுமான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தலை, முகம் முழுக்க ரத்த காயங்களுடன் ரிஷப் பந்த் நிற்கும் சோகமான நிலை அவரது ரசிகர்களை பதைபதைக்க வைத்துள்ளது.
விபத்து குறித்து என்டிடிவியில் வெளியான தகவலின்படி, விபத்து நடந்த போது ரிஷப் பந்த் மெர்சிடிஸ் காரில் தனியாக இருந்ததாகவும், தீப்பிடித்து எரியும் காரில் இருந்து வெளியே வர அவர் கண்ணாடியை உடைத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த விபத்தில் ரிஷப் பந்த்துக்கு தலை, முழங்கால் மற்றும் தாடையில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன என்றும் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.