பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் மோடி காலமானார்!

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி காலாமானார். தாயாரின் மறைவை பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி (வயது 100), திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, ஆமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா இதய நோய் ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், பிரதமர் மோடி அங்கு விரைந்து வந்து தாயாரைப் பார்த்துச் சென்றார். அவருக்கு அளிக்கப்படுகிற சிகிச்சை குறித்தும் டாக்டர்களிடம் விசாரித்து அறிந்தார். ஹீராபென் மோடியின் உடல் நலம் தேறி வருவதாகவும் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இன்று அதிகாலை சிகிச்சை பலனிறி உயிரிழந்தார். அவருக்கு வயது 100. தாயார் மறைவையடுத்து பிரதமர் மோடி அவசர அவசரமாக அகமதாபாத் புறப்பட்டு சென்றுள்ளார். ஏற்கனவே திட்டமிட்டு இருந்த நிகழ்ச்சிகளில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்பார் என்று மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தனது தாயார் இறந்தது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, “ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியை சேர்ந்துள்ளது. என் தாயிடம், ஒரு துறவியின் பயணத்தையும், தன்னலமற்ற கர்மயோகியின் அடையாளத்தையும், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையையும் உணர்ந்துள்ளேன். 100வது பிறந்தநாளில் நான் அவரைச் சந்தித்தபோது, அவர் ஒரு விஷயத்தைச் சொன்னார். புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழ்க. அதாவது, புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழ்க்கையை வாழுங்கள் என்பதே. இது எப்போதும் நினைவில் இருக்கிறது” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.