இந்தியா, பாகிஸ்தான் அணு ஆயுத விவரங்கள் பரிமாற்றம்!

இந்தியா, பாகிஸ்தான் இடையே அணு ஆயுதங்களின் இருப்பு குறித்த விவரங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே, இருநாடுகளில் உள்ள அணுசக்தி நிலைகள் மற்றும் அணு ஆயுத கிடங்குகள் மீதான பரஸ்பர தாக்குதல்களை தடை செய்யும் ஒப்பந்தம் கடந்த 1988-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளும் தங்கள் அணு ஆயுதங்கள் மற்றும் நிலைகள் குறித்த விவரங்களை ஆண்டுதோறும் பரிமாறிக்கொள்ள வேண்டும். அதன்படி கடந்த 1992 ஜனவரி 1-ந்தேதி முதல் ஆண்டுதோறும் இந்த பரிமாற்ற நடைமுறை அமலில் இருக்கிறது.

அதன்படி இந்த ஆண்டும் இந்தியா, பாகிஸ்தான் இடையே அணு ஆயுதங்களின் இருப்பு குறித்த விவரங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்திய அணு ஆயுத விவரங்களை ஒப்படைத்தது.

அதே போல் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில், அந்த நாட்டு வெளியுறவு அமைச்சகம் தங்கள் அணு ஆயுத விவரங்களை வழங்கியது. காஷ்மீர் விவகாரம் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல்களால் இரு நாட்டு உறவில் சிக்கல் நீடித்தபோதும் இந்த பட்டியல் பரிமாற்றம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.