பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது: ஓபிஎஸ் மனு!

அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்துள்ளார்.

திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்துள்ள உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு கடந்த பிப்ரவரி மாதம் மனு அளிக்கப்பட்டது. இதுவரையிலும் எந்த பதிலும் இல்லை. எனவே, இது தொடர்பாக உரிய உத்தரவு பிறப்பிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.

இந்த வழக்கில் கடந்த டிச.4-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், “சூர்யமூர்த்தியின் மனு குறித்து தேர்தல் ஆணையம் 4 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும். பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்க வேண்டும்” என கூறப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, பழனிசாமி, வா.புகழேந்தி, ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்டோர் தங்கள் தரப்பு கருத்துகளை தெரிவித்து மனு அளித்துள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

அதிமுக அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளராக இருந்து கட்சியை வழிநடத்தினேன். 2022 ஜூலை 11-ம் தேதி நடத்திய பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் கட்சி சட்ட விதிகளுக்கு உட்பட்டு நிறைவேற்றப்படவில்லை. 2021-ம் ஆண்டு கட்சி தலைமைக்கான தேர்தல் நடத்தப்பட்டு, அடிப்படை உறுப்பினர்களால் ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள். இதன் ஆயுட்காலம் முடிவதற்கு முன்பாக கலைத்துவிட்டு, அதிமுகவின் புதிய தலைமையை தேர்ந்தெடுக்க முடியாது. அதனால் 2022-ம் ஆண்டு என்னை நீக்கிய தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்வு தொடர்பான திருத்தம் குறித்த தீர்மானங்கள் உள்ளிட்ட அனைத்து தீர்மானங்களும் செல்லாது.

இந்த தீர்மானங்கள் அடிப்படையில் தேர்தல் நடத்தி தான் பழனிசாமி பொதுச்செயலாளர் ஆகியுள்ளார். அதன் அடிப்படையில் தேர்தலில் இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதற்கான ஏ, பி படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. எனவே 2022-ம் ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில், பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என அறிவித்து, தேர்தலில் இரட்டை இலை சின்னம் ஒதுக்க பழனிசாமி கையெழுத்திட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

அனைத்து தரப்பினரும் தங்கள் தரப்பு கருத்துகளை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க தேர்தல் ஆணையம் ஜன.13 வரை அவகாசம் வழங்கியுள்ளது.