பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ஒவ்வொரு ரேஷன்கார்டு தாரருக்கும் ரூபாய் 2 ஆயிரம் வழங்க வேண்டும் என பாஜக வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகள் மூலம் இதற்கான டோக்கன் நாளை ஜனவரி 3 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் விநியோகம் செய்ய டோக்கன் அச்சடிக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. நாளை முதல் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வீடு வீடாக டோக்கன் விநியோகம் செய்யப்படும். பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கான நாள், நேரம் ஆகிய விவரங்கள் டோக்கனில் இடம்பெற்றிருக்கும். தினமும் காலையில் 100 பேர், பிற்பகலில் 100 பேர் பெறும் வகையில் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறை பொங்கல் பரிசுத் தொகுப்போடு, ரொக்கப் பணமும் வழங்கப்படும் என மக்கள் எதிர்பார்த்த நிலையில், ரொக்கப் பணம் வழங்கப்படாது என கைவிரித்துவிட்டது தமிழக அரசு. எதிர்க்கட்சிகள், பொங்கல் பரிசாக மக்களுக்கு ரூபாய் 2000 வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தன. ஆனால், தமிழக அரசு அதனைக் கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.2,000 வழங்க வேண்டும் என பாஜக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும் பொங்கல் திருநாளை ஏழை எளிய மக்கள் சந்தோசமாக கொண்டாட அனைத்து ரேஷன் கார்டு அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்களோடு ரூபாய் 2000 உதவித்தொகை வழங்க கோரி பாஜக வழக்கறிஞர் ஏற்காடு ஏ மோகன் தாஸ் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, பொங்கல் பரிசு கொடுக்கும் வழக்கத்தை துவங்கி வைத்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் பலமுறை பொங்கல் பரிசு பொருட்களோடு ரொக்கப் பணமும் கொடுக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் 2020 ஆண்டுக்கான பொங்கல் பரிசு பொருட்களோடு ரூபாய் 2000 ரொக்கப் பணமும் கொடுக்கப்பட்டது. பொங்கல் பரிசுடன் ரொக்கப் பணம் கடந்த காலங்களில் ஆண்ட அதிமுக அரசும் சரி ஆளும் திமுக அரசும் சரி எப்போதெல்லாம் தேர்தல் வருகிறதோ அந்த ஆண்டுகளில் எல்லாம் பொங்கல் பரிசு பொருட்களோடு ரொக்கத் தொகையும் கொடுத்து வருவதை வழக்கமாக வைத்திருந்தார்கள். வாக்காளர்களை கவரும் வண்ணம் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டனர். எப்போதெல்லாம் தேர்தல் வரவில்லையோ அப்போதெல்லாம் கஜானா காலி என்று சொல்லி ரொக்க தொகையை கொடுக்க மறுத்து வந்து உள்ளார்கள்.
கடந்த 2023 ஆம் ஆண்டு அனைத்து எதிர்கட்சிகளின் எதிர்ப்புக்கு பிறகு மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சார்பில் பொங்கல் பரிசுகளோடு ரூபாய் 1000 ரொக்கத் தொகை கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த ஆண்டு வரும் பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசு பொருட்கள் மட்டும் விநியோகிக்கப்படும் என்றும் ரொக்கப்பணம் ஏதும் கொடுக்க முடியாது என்றும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.அதற்கு காரணம் தமிழக அரசின் கஜானாவில் பணம் இல்லை என்றும், வெள்ள நிவாரணத்துக்கு அதிக நிதி அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார். எப்போதெல்லாம் மக்கள் உதவித்தொகை மற்றும் நிவாரணத் தொகை கேட்கிறார்களோ அப்போதெல்லாம் திமுக அரசு, கஜானாவில் பணம் இல்லை என்றும் மத்திய அரசை குறை சொல்வதையே வாடிக்கையாக வைத்துள்ளது.
கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு தமிழகத்தில் வெள்ளத்தால் அனைத்து தரப்பு மக்களும், விவசாயிகள், கூலித் தொழிலாளிகள், பெண்கள் உள்ளிட்ட அனைவரும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளார்கள். மழை வெள்ளத்தால் தங்களது உடைமைகளை இழந்துள்ளனர். விவசாயம் முற்றிலும் நலிவடைந்து விட்டது. விவசாய பயிர்கள் நாசமாகிவிட்டன. எனவே பொங்கல் பரிசுத் தொகுப்போடு நிவாரணமாக பணம் கொடுக்கவில்லை என்றால் வரும் பொங்கல் பண்டிகையை மக்கள் சந்தோஷமாக கொண்டாட முடியாத நிலை ஏற்படும். எனவே ஏற்கனவே கடந்த காலங்களில் வழங்கப்பட்டது போல் இந்த ஆண்டும் பொங்கல் திருநாளை கொண்டாட ரேஷன் கார்டு அட்டைதாரர்களுக்கு தல ரூபாய் 2000 பணத்தை பொங்கல் பரிசு தொகுப்போடு கொடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
முன்னதாக, தமிழக அரசின் தலைமைச் செயலர், நிதித்துறை செயலர் மற்றும் ரேஷன் பொருட்கள் விநியோகத்துறைக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பினார் பாஜக வழக்கறிஞர் மோகன் தாஸ். தமிழக அரசு அதனை பரிசீலித்து பொங்கல் தொகுப்பில் ரொக்கப் பணத்தை சேர்க்காத நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் பிறப்பிக்கும் உத்தரவைப் பொறுத்தே இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு மக்களுக்கு பொங்கல் தொகுப்போடு, ரொக்கப் பணமும் கிடைக்குமா கிடைக்காதா என்பது தெரியவரும். எனவே, இந்த வழக்கு அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது.