500 அரசு பள்ளிகளை தனியாருக்கு தருவது தொடர்பாக வெளியான செய்திக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மறுப்பு தெரிவித்துள்ளார். செய்தியின் உண்மைத்தன்மையை அறியாமலேயே கண்டனத்தை பதிவு செய்வதா? என ஆதங்கம் தெரிவித்துள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ்.
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து இன்று திறக்கப்பட்டது. இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நீலாங்கரை பகுதியில் அமைந்துள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் ஆய்வு செய்து அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிக்கு திரும்பிய மாணவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை, அறிவிப்புகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாவது:-
அரசு பள்ளிகளை தனியாருக்கு தாரைவார்க்கவில்லை. பத்திரிகைகளில் வெளியான செய்தி தவறானது; செய்தியின் உண்மைத்தன்மையை அறியாமலேயே கண்டனத்தை பதிவு செய்வதா? அரசுப் பள்ளிகள் எங்கள் பிள்ளைகள்; அதை யாரும் தத்து கொடுக்கவில்லை. முதலில் நான் என்ன பேசினேன் என்பதை பாருங்கள். சந்தேகம் இருந்தால் கேளுங்கள். உறுதிப்படுத்தாமல் கண்டனம் தெரிவித்தோருக்கும் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன். தொடர்ந்து தவறான செய்திகளுக்கு விளக்கம் கொடுத்து கொடுத்தே சோர்வடைந்து விட்டேன்.
சிஎஸ்ஆர் நிதி மூலம் தனியார் பங்களிப்புடன் அரசு பள்ளிகளை மேம்படுத்த மட்டுமே நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. தனியார் பள்ளி விழாவில் முழுமையாக என்ன பேசப்பட்டது என்றுகூட தெரியாமல் ‘கண்டிக்கிறோம்’ என்று அறிக்கைக் கொடுப்பவர்களுக்கு என்னுடைய ‘வன்மையான கண்டனத்தை’ தெரிவிக்கிறேன். உங்களால் எங்களுடைய பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் பாதிக்கப்படுகிறார்கள். உண்மை என்னவென்று தெரிந்துக்கொண்டு அறிக்கைக் கொடுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக 500 அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தத்து கொடுக்கும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியிருப்பதாக தகவல் வெளியானது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன. 500 அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு தத்துக் கொடுப்பதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், இதற்கு தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் மறுத்து அறிக்கை வெளியிட்டது. அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவே, சமூக பங்களிப்பு நிதியின்கீழ் தனியார் பள்ளிகளின் பங்களிப்பு இருக்கும் என்றுதான் சொல்லப்பட்டது. எந்த இடத்திலும் அரசுப் பள்ளிகளை தத்தெடுப்போம் என்று யாரும் சொல்லவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது.