பாதிக்கப்பட்ட சகோதரிக்கு நியாயம் கிடைக்க பெண்கள் குரல் கொடுக்க வேண்டும்: அண்ணாமலை!

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டித்து நாளை மதுரையில் இருந்து சென்னை வரை தமிழக பாஜக மகளிரணி சார்பில் நீதி கேட்பு பேரணி மேற்கொள்ள இருப்பதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். இந்த நீதி கேட்பு பேரணியில் பெருவாரியான அளவில் சகோதரிகள் கலந்து கொண்டு, பாதிக்கப்பட்ட சகோதரிக்கு நியாயம் கிடைக்கக் குரல் கொடுக்க வேண்டும் என்று அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

தமிழகத்தில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குற்றவாளிகள் திமுகவினராக இருப்பதால், பெரும்பாலும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுத்தி, குற்றத்தை மூடி மறைக்க முயல்கிறது திமுக தரப்பு. அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் தாக்குதல் வழக்கிலும், கைது செய்யப்பட்ட திமுக நிர்வாகியுடன், கைப்பேசியில் பேசிய நபர் யார் என்ற உண்மையை முழுவதுமாக மறைக்க முயற்சிக்கிறது. இன்னும் ஒரு படி மேல் சென்று, பாதிக்கப்பட்ட மாணவியை, பொதுவெளியிலும், மாமன்றத்திலும் அவமானப்படுத்தியும், மாணவி குறித்த தனிப்பட்ட விவரங்களைக் கசிய விட்டு, இனி யாரும் குற்றவாளிகள் மீது புகார் கொடுக்க அச்சப்படும் அளவிற்கு மறைமுகமாக மிரட்டியும், தரம் தாழ்ந்தும் சென்று கொண்டிருக்கிறது திமுக அரசு.

திமுக அரசின் இந்தப் பெண்கள் விரோதச் செயல்பாடுகளைக் கண்டித்தும், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாதிக்கப்பட்ட வழக்கில், முழு உண்மையும் வெளிக்கொண்டு வந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பாஜக மகளிர் அணி சார்பில், நாளை 03.01.2025 அன்று மதுரையில் தொடங்கி, சென்னை வரை நடைபெறவிருக்கும் நீதி கேட்பு பேரணியில் பெருவாரியான அளவில் சகோதரிகள் கலந்து கொண்டு, பாதிக்கப்பட்ட நமது சகோதரிக்கு நியாயம் கிடைக்கக் குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.