அமலாக்கத் துறை சோதனை குறித்து அமைச்சர் துரைமுருகன் கருத்து!

“அமலாக்கத்துறை சோதனை குறித்து உங்களுக்கு எவ்வளவு தெரியுமோ, அவ்வளவுதான் எனக்கும் தெரியும். இந்த சோதனைக்கு யார் வந்துள்ளார்கள் என்பது தெரியவில்லை. யாரும் வீட்டிலும் இல்லை. இரண்டு பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களுக்கு சோதனை செய்ய வந்திருப்பவர்கள் எந்த துறையைச் சேர்ந்தவர்கள் என்ற விவரங்கள்கூட தெரியாது,” என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

வேலூரில் தமிழக நீர்வளம் மற்றும் கனிமவளத் துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் இன்று (வெள்ளிக்கிழமை) சோதனை நடத்தி வருகின்றனர். காட்பாடி காந்திநகரில் உள்ள அமைச்சரின் வீடு, மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகம், அமைச்சரின் நம்பிக்கைக்குரிய பூஞ்சோலை சீனிவாசன் அவரது உறவினர் வீடு உள்பட 4 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

இந்நிலையில் சென்னை கோட்டூர்புரத்தில் அமைச்சர் துரைமுருகனை சந்தித்த செய்தியாளர்கள், அமலாக்கத்துறை சோதனை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “இந்த சோதனை குறித்து உங்களுக்கு எவ்வளவு தெரியுமோ, அவ்வளவுதான் எனக்கும் தெரியும். இந்த சோதனைக்கு யார் வந்துள்ளார்கள் என்பது தெரியவில்லை. யாரும் வீட்டிலும் இல்லை. இரண்டு பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களுக்கு சோதனை செய்ய வந்திருப்பவர்கள் எந்த துறையைச் சேர்ந்தவர்கள் என்ற விவரங்கள்கூட தெரியாது. எனவே பணியாளர்களுக்கு சரியாக எதுவும் சொல்லத் தெரியவில்லை. காட்பாடி சென்றபிறகுதான் சோதனை குறித்த விவரம் தெரியவரும்,” என்று அவர் கூறினார்.

மேலும், வரும் ஜன.6ம் தேதி, தமிழக சட்டமன்றம் கூடவுள்ளது. இதையொட்டி இந்த ஆண்டில் முதல்முறையாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்துக்கு இன்று வந்திருந்தார். அங்கு முதல்வரைச் சந்தித்து அமைச்சர்கள் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர். அமைச்சர் துரைமுருகனும் தலைமைச் செயலகத்தில் முதல்வரைச் சந்தித்துப் பேசினார். அப்போது சட்டமன்ற கூட்டத்தொடர் நிகழ்வுகள் மற்றும் அமலாக்கத்துறை சோதனை குறித்தும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.