நடப்பு ஆண்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நாளை நடக்கிறது. இதனால் களத்தில் சீறிப்பாய காளைகள் மற்றும் அதனை அடக்க இளைஞர்களும் தயாராக உள்ளனர்.
பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டு வரும் 14 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கல் வைத்து சூரியனை வழிபடுபவர். பொங்கல் என்றாலே, கரும்புக்கு அடுத்து நியாபகம் வருவது ஜல்லிக்கட்டு தான். தமிழர்களின் பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு விளங்கி வருகிறது. ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகளும் நடந்து வருகிறது. மதுரை, தேனி, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் உற்சாகமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் ஜல்லிக்கட்டு பிரபலம்.
இந்த நிலையில் நடப்பு ஆண்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அனுமதியினை அரசு வழங்கியுள்ளது. மேலும் எப்போது போட்டி தொடங்கும் தேதி மற்றும் எங்கு நடக்கிறது என்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டம் கந்தவர்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் நடப்பு ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி நாளை சனிக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு வாடிவாசல், கேலரி, தடுப்புகள், மேடைகள் அமைக்கும் பணிகள் நடந்தன. காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான டோக்கன் வினியோகம் செய்யும் பணியும் இணையதளம் மூலம் தொடங்கி நடந்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பார்வையிட்டு வருகிறார்கள். வருவாய்த் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதால், தற்போது ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மாடுபிடி வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்க வசதியாக, ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள இடத்தில் மருத்துவ முகாம், காவல் கட்டுப்பாட்டு அறை போன்ற முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. தச்சங்குறிச்சியில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்க உள்ளதால் அம்மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர். எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் விதமாக அனைத்து விதமான பாதுகாப்பு முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.