தமிழகத்தில் நீர் மூலம் நோய் பரவுவது தொடர்ந்து அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதன் பின்னணி குறித்து விரைவாக ஆய்வு செய்து உரிய முன்னேற்பாடுகளை செய்ய வேண்டியது அவசியமாகிறது.
மனிதர்கள் வாழ சுகாதாரமான நீரும், உணவும் அவசியம். இவை இரண்டும் மாசுபாட்டால் உடல்நலக் குறைபாடுகள் ஏற்படும். இந்நிலையில் தமிழகத்தில் நீர் மூலம் நோய் பரவுவது படிப்படியாக அதிகரித்து வருகிறது என்று தமிழ்நாடு பொது சுகாதார இயக்குநரகத்தின் (DPH) புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2024ல் மட்டும் ஒரு லட்சம் பேருக்கு வயிற்றுப்போக்கு, 70 காலரா, 25 ஆயிரம் டைஃபாய்டு காய்ச்சல் எனப் பரவியிருக்கிறது. இதில் 35 சதவீத காலரா நோயாளிகள், 16 சதவீத டைஃபாய்டு காய்ச்சல் ஆகியவை சென்னையில் பதிவாகியுள்ளன. இதற்கு என்ன காரணம் என்று விரிவாக ஆய்வு செய்தால் நீர் சரியான முறையில் சுத்தகரிப்பு செய்யப்படுவதில்லை. வீடுகளில் நீரை வடிகட்டி, சூடுபடுத்தி அருந்துவதில்லை. தூய்மையான சுற்றுப்புறத்தை பராமரிப்பதில்லை போன்றவற்றை சுட்டிக் காட்டுகின்றனர்.
கடந்த ஆண்டு இறுதியில் சென்னையில் இருந்து வெளியான செய்தி ஒன்று நீர் மாசுபாடு குறித்து கூடுதல் அக்கறை செலுத்த வேண்டியதை உணர்த்தியது. அதாவது பல்லாவரத்தில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததாக கூறப்படும் நிகழ்வில் 2 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதேபோல் ரசாயனங்கள் சேர்த்து விற்கப்படும் துரித உணவுகளும் ஆபத்தானதாக மாறி வருகிறது என்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர். கடந்த சில ஆண்டுகளில் கெட்டுப் போன இறைச்சி, கலப்படம் நிறைந்த உணவுப் பொருட்கள் ஆகியவை சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகின்றன. இதுதொடர்பாக அதிகாரிகளும் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு கெட்டுப் போன உணவுப் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். ஆனாலும் பிரச்சினை முழுவதுமாக தீர்ந்தபாடில்லை.
எனவே நீர் மற்றும் உணவில் சுகாதாரமான நிலையை உறுதி செய்ய வேண்டியது முக்கியமானது. இந்த விஷயத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். குறைகளை விரைவாக கண்டறிந்து எடுத்துரைத்து சுகாதார நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.