பெண்களின் உரிமை மற்றும் பொருளாதார தன்னிறைவுக்காக பல திட்டங்களை இந்த ஆட்சியில் தொடர்ந்து தீட்டி வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தென்சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில், சைதாப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் திறன் மேம்பாட்டு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். மேலும், தையற்கலை, அழகுக் கலை பயிற்சி பெறுவோருக்கான ஆணைகளையும் வழங்கினார். தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:-
சமூகத்தில் இருக்கின்ற ஏற்றத்தாழ்வுகளை நீக்கி, சமத்துவத்தை நிலைநாட்ட உருவான இயக்கம்தான் நம்முடைய இயக்கம். அதில் பாலின சமத்துவமும் முக்கியமான ஒன்று. பெண்களுடைய உரிமைகளுக்காகவும், அவர்களுடைய முன்னேற்றத்துக்காகவும் ஏற்கெனவே அண்ணா, கருணாநிதி காலத்தில் பல்வேறுத் திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. தொடர்ந்து அவர்களின் வழியில், இன்று பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக, அரசுப் பணிகளில் மகளிருக்கு இட ஒதுக்கீடு, மகளிர் சுய உதவி குழுக்கள், சொத்தில் பெண்களுக்கு சம உரிமை என்று இப்படி பல்வேறு திட்டங்களை சொல்லலாம். பெண்களின் பொருளாதார தன்னிறைவுக்காகவும் பல திட்டங்களை இந்த ஆட்சியில் தொடர்ந்து தீட்டி வருகிறோம்.
பெண்கள் கல்வியறிவு பெறவேண்டும் என்பதைத் தாண்டி, பெண்களின் உயர்கல்வியை உறுதி செய்யும் திட்டங்களை தீட்டி வருகிறோம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணம் திட்டம், புதுமைப்பெண் திட்டம், பணிபுரியும் பெண்களுக்கான தோழி விடுதி என ஒவ்வொரு திட்டமும் பெண்கள் கல்வியறிவு பெறவேண்டும், நல்ல வேலைகளுக்குப் போகவேண்டும், அதிகாரத்தில் சென்று அமரவேண்டும், உலக அறிவு பெறவேண்டும் என்பதற்காக செயல்படுத்தி வருகிறோம்.
பெண்கள் உயர்ந்தால்தான் ஒரு சமூகம் நிமிர்ந்து நிற்க முடியும். பெண்ணடிமை தீர்ந்து, பெண் அதிகாரம் பெறும் அந்த மாற்றத்தை நோக்கி இன்றைக்கு தமிழகம் மிக வேகமாக முன்னேறி வருகிறது. பெரிய அளவிலான திட்டங்கள் மட்டுமி்ன்றி, சிறிய, சிறிய அளவிலான திட்டங்களும் மிகவும் முக்கியமானதாக அமைந்திருக்கிறது. அந்த வகையில் கொளத்தூர் தொகுதியில் நீட் தேர்வின் காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் பெயரில் ‘அனிதா அச்சீவர்ஸ் அகாடமி’ ஆரம்பித்து பெண்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்படுகிறது. ‘டேலி’ உள்ளிட்ட கணினி சார்ந்த படிப்புகள், இலவச மடிக்கணினி, தையல் பயிற்சி உள்ளிட்ட பல பயிற்சிகளை பெண்கள் முடித்து இன்றைக்கு நல்ல நிலையில் இருக்கின்றனர்.
அதேபோல் தான் இன்று சைதாப்பேட்டையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னெடுப்பில், கலைஞர் மகளிர் திறன் மேம்பாட்டு மையம் தொடங்கப்படுகிறது. ‘நேச்சுரல்ஸ்’ மூலமாகவும், ‘உஷா’ நிறுவனம் மூலமாகவும் மகளிருக்கு திறன் பயிற்சி கிடைக்கப் போகிறது. இங்கும் ‘டேலி’பயிற்சி வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் 2 ஆயிரம் பேருக்கு பயிற்சியளித்து, வாழ்க்கையில் ஒரு அடி முன்னேறி நிற்க அமைச்சர் உதவியுள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தென்சென்னை எம்பி, தமிழச்சி தங்கபாண்டியன், துணை மேயர் மு.மகேஷ்குமார், அரவிந்த் ரமேஷ், தாயகம் கவி உள்ளிட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள், புனித தோமையர் மலை ஊராட்சி ஒன்றிய தலைவர் எஸ்.சங்கீதா பாரதிராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.