நடிகை குஷ்பு உள்ளிட்ட பாஜக மகளிரணியினர் கைது செய்யப்பட்டு ஆடுகள் அடைக்கப்படும் தொழுவத்தில் அடைக்கப்பட்டதாக சர்ச்சை வெடித்தது. மதுரையில் பாஜக பெண்களை ஆட்டு மந்தைகளுடன் அடைத்ததற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சீமான் கூறியிருப்பதாவது:-
அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாலியல் வன்கொடுமைக்கு நீதிகேட்டு எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பதும், அவர்கள் மீது அடக்குமுறையை ஏவிவிடுவதும், துண்டறிக்கைகளைக் கொடுப்பதற்குக்கூட கைது செய்வதுமான திமுக அரசின் செயல்பாடுகள் மக்களாட்சிக்கு எதிரான கொடுங்கோன்மையாகும். அதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் அறப்போராட்டம் செய்ய முனைந்த கட்சியினரை கைதுசெய்து கடுமையாக நடத்தியதும், மதுரையில் கைதுசெய்யப்பட்ட பாஜகவைச் சேர்ந்த பெண்களை ஆட்டுமந்தைகள் அடைக்கப்பட்டுள்ள மண்டபத்தில் அடைத்து வைத்ததும் ஒருபோதும் ஏற்புடையதல்ல; அது மாநில அரசின் மாண்புக்கு பெரும் இழுக்காகும்! கைதுசெய்து தூரமாகக் கொண்டு சென்று அடைப்பதும், மதுரையில் இடமே இல்லாததுபோல ஆட்டுத் தொழுவத்தில் அடைப்பதுமான இழிவான செயல்பாடுகளையும் , எதிர்க்கட்சிகளைக் கையாளும் மோசமான அணுகுமுறையையும் திமுக அரசின் பாசிசப் போக்கையே காட்டுகிறது. இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.