ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து புகார் அளித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும்” என்றார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மகளிர் அணி தலைவர் உமாரதி ராஜன், தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு, பாஜக நிர்வாகிகள் ராதிகா, விஜயதாரணி, சசிகலா புஷ்பா உள்ளிட்ட மகளிர் அணி நிர்வாகிகள் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேற்று சனிக்கிழமை மாலை சந்தித்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது வேதனை அளிக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை எதிர்த்து, பாஜக பெண் நிர்வாகிகள் பொதுவெளியில் குரல் எழுப்பினால் கைது செய்யப்படுகின்றனர். அறிவிக்கப்படாத அவசர நிலை தமிழகத்தில் நிலவுகிறது.
இந்தச் சம்பவத்தில் இன்னொரு சார் இருப்பதாக பாதிக்கப்பட்ட மாணவி புகாரில் பதிவு செய்துள்ளார். சென்னை காவல் ஆணையர் முதல் நாளில் சொல்லும் போது, சார் என்று யாரும் இல்லை. இவர் தான் குற்றவாளி என்று ஏன் சொன்னார். அந்த சாரை ஏன் மறைக்கிறீர்கள். அந்த சார் எங்கே இருக்கிறார். யாரை காப்பாற்ற நினைக்கிறீர்கள். எந்த ஊரை சேர்ந்தவர் இந்த சார்? எந்த இயக்கத்தை சார்ந்தவர் இந்த சார்? எங்களுக்கு தெரிய வேண்டும்.
நாங்கள் அனைவரும் தெரிவித்த கருத்துகளை ஆளுநர் பொறுமையாக கேட்டறிந்தார். தொடர்ந்து திமுகவினரால் பெண்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாக அதிகாரபூர்வமாக ஆளுநரிடம் தெரிவித்திருக்கிறோம். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.
30.8.24ல் 4ம் வகுப்பு படிக்கும் ஒரு குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். 14.08.24ல் 4 பேர் சேர்ந்து கூட்டு வன்கொடுமை செய்துள்ளனர். அதில், தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள் என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 06.08.23ல் வளசரவாக்கத்தில் ஒரு வன்கொடுமை சம்பவம் நடந்துள்ளது. அதிலும் தி.மு.க.,வைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்புள்ளது. அதேபோல, 12.04.23ல் 6 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை, 02.01.23ல் நடந்த வன்கொடுமை சம்பவத்திலும், தி.மு.க.,வினருக்கு தொடர்பு. பெண் கான்ஸ்டபிள் மீதும் பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்பட்டுள்ளது, அதுவும் இங்கு பதிவாகியுள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பல்கலைக்குள்ளேயே பாதுகாப்பு இல்லை. உயர்கல்வித்துறை அமைச்சர் ஏதோ ஒன்று நடந்திருச்சு, என்பதை கேட்டு செல்ல முடியாது.
இந்த விவகாரத்தில் ஏன் இன்னும் முதல்வரும், துணை முதல்வரும் தங்களுடைய குரலை எழுப்பவில்லை. ஏதோ ஒரு மாநிலத்தில் இருந்தால் முதல்வர் உடனே பேசுவார். தனது மாநிலத்தில் நடந்த பிரச்சினைக்கு ஏன் பேசவில்லை. விசாரணை சரியாக நடக்காதோ என்று நாங்கள் பயப்படுகிறோம். ஏனெனில் குற்றவாளிகளுக்கு நீங்கள் உறுதுணையாக இருக்கிறீர்கள். இங்கு போராடும் பெண் தலைவர்கள் கைதாகிறார்கள். கைதாகும் குற்றவாளிகள் நடமாடுவார்கள். இதுதான் திமுக அரசு. இதுபோன்ற நிகழ்வுகள் இனிமேல் நடைபெறக் கூடாது. சிபிஐ விசாரணை நடைபெற்றால் மட்டுமே இங்கு இருக்கும் பாரபட்ச நிகழ்வுகள் வெளிக்கொணரப்படும். எனவே, சிபிஐ விசாரணை வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.