தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் பங்கேற்ற சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுப்பிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கு நிகழ்ச்சியில் மாணவிகளின் கறுப்பு நிற துப்பட்டாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது. இதற்கு தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுப்பிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கு இன்று முதல் சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இக்கருத்தரங்கை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் இந்த நிகழ்வில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பினை உலகுக்கு அறிவித்த இந்தியத் தொல்லியல் துறையின் தலைமை இயக்குநர் சர் ஜான் ஹீபர்ட் மார்ஷல் திருவுருச்சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறை சார் மாணவிகள் பங்கேற்றனர்.
முன்னதாக மாணவிகள் நிகழ்ச்சியில் கறுப்பு நிற துப்பட்டாவை அணிந்து செல்ல மறுக்கப்பட்டதாகவும் கறுப்பு நிற துப்பட்டா இல்லாமல்தான் மாணவிகள் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டதாகவும் சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. சமூக வலைதளங்களிலும் இது குறித்து சில போட்டோக்கள் வெளியிடப்பட்டன. இதன் உண்மைத்தன்மை உறுதியாகவில்லை. இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர்கள் பலரும் முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சியில், கறுப்பு துப்பட்டாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், ஓஹோ.. முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சியிலா? கறுப்புக் கலர் துப்பட்டாவை கறுப்புக் கொடி என நினைக்கிறார்களோ என்னவோ? அதனால் கறுப்பைப் பார்த்து முதல்வர் ஸ்டாலினும் பயப்பட ஆரம்பித்திருக்கிறாரா என தெரியவில்லை.. இதில் பெரியவர் வீரமணியிடம் சந்தேகம் கேட்க வேண்டும். அரண்டவர் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய் என்பது போல ஆட்சி தவறுகளை செய்வதால் கறுப்பு துப்பட்டா எல்லாம் கறுப்பு கொடிகளாக தெரிகிறது போல.. அண்ணா பல்கலைக் கழக மாணவி பலாத்கார விவகாரத்தில் உண்மையான விசாரணை நடைபெறுகிறது என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.