மார்க்சிஸ்ட் கம்யூனிட்ஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பெ. சண்முகம் தேர்வு!

மார்க்சிஸ்ட் கம்யூனிட்ஸ்ட் கட்சியின் (சிபிஎம்) கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பெ.சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விழுப்புரத்தில் நடைபெற்ற சிபிஎம் மாநாட்டில் 80 பேர் கொண்ட மாநிலக் குழு கூட்டத்தில் தற்போது மத்திய குழு உறுப்பினராக உள்ள பெ.சண்முகம், தமிழ்நாட்டுக்கான மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சிபிஎம் கட்சியின் 24-வது மாநில மாநாடு விழுப்புரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் இடதுசாரி கட்சிகளான சிபிஐ, சிபிஐ (எம்.எல்) லிபரேசன் உள்ளிட்டவற்றின் தலைவர்களும் பங்கேற்றனர். விழுப்புரத்தை அதிரவைத்த செம்படைப் பேரணியும் நடைபெற்றது. மாநாட்டில் மத்திய பாஜக அரசு மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பாசிச அரசியலை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த நிலையில் விழுப்புரம் மாநாட்டில் இன்று பேசிய கே.பாலகிருஷ்ணன், தமக்கு அடுத்த மாதம் 72 வயதாகிறது; ஆகையால் தம்மை மாநிலச் செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும். கட்சியின் விதிகளின் படி 72வயதாகிறவர்களுக்கு கட்சிப் பதவிகளில் இருக்கக் கூடாது; ஆகையால் எனக்கு கட்சிப் பதவி வேண்டாம் என அறிவித்திருந்தார். இதனையடுத்து சிபிஎம் கட்சியின் 80 பேர் கொண்ட மாநில நிர்வாகக் குழு கூடி விவாதித்தது. அப்போது சிபிஎம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பெ.சண்முகம், புதிய மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தற்போது சிபிஎம் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக இருக்கிறார் பெ. சண்முகம். மாணவப் பருவம் முதலே இடதுசாரி இயக்கத்தில் இணைந்து பயணிப்பவர். மழைவால் மக்கள் சங்கம் உள்ளிட்டவற்றை முன்னெடுத்து நடத்தியவர். வாச்சாத்தி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களுக்காக நீண்ட சட்டப் போராட்டத்தை நடத்தியவர் பெ. சண்முகம்.