பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் விழா ஊக்கத்தொகை வழங்க வேண்டும்: சீமான்!

12000க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர் பெருமக்களுக்கு பொங்கல் விழா ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளதாவது:-

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி, திமுக அரசு பகுதிநேர ஆசிரியர்களைப் பணிநிரந்தரம் செய்திருந்தால், தற்போது இதர அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்குக் கிடைக்கின்ற அனைத்து உரிமைகளும் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் கிடைத்து இருக்கும். ஆனால் ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகளைக் கடந்தும் திமுக அரசு பணி நிரந்தரம் செய்ய மறுப்பது பகுதி நேர ஆசிரியர் பெருமக்களுக்குச் செய்கின்ற பெருந்துரோகமாகும். அதனால் தற்போது கிடைக்கின்ற 12,500 ரூபாய் குறை ஊதியத்தால் பெரும் பொருளாதார நெருக்கடியில் பகுதிநேர ஆசிரியர்கள் சிக்கித்தவித்து வருகின்றார்கள்.

இந்நிலையில் அவர்களுக்கு பொங்கல் விழா ஊக்கத்தொகை வழங்க மறுப்பதென்பது கொடுங்கோன்மையாகும். ஆகவே, 13 ஆண்டுகளாகப் பணிநிரந்தரம் கேட்டு போராடி வருகின்ற 12000க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றுவதோடு, தமிழ்த்தேசிய திருநாளாம் பொங்கல் விழாக்கால ஊக்கத்தொகையை உடனடியாக வழங்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.