மாணவிகளின் கருப்பு நிற துப்பட்டா அகற்றம்: திமுகவுக்கு அச்சம் வந்துடுச்சு: அண்ணாமலை!

திமுக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த மாணவிகளை, கருப்புநிற துப்பட்டா அணிந்து செல்ல அனுமதி இல்லை என்று அவர்களை வெளியே நிறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுப்பிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கு இன்று தொடங்கியது. சென்னையில் எழும்பூரில் உள்ள அருங்காட்சியகக் கலையரங்கில் இந்த நிகழ்ச்சி தொடங்கியது. இன்று முதல் 3 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை முதல்வர் முக ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மாணவ-மாணவிகள் பலரும் வந்து இருந்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மாணவிகள், கருப்பு நிறத்திலான துப்பட்டா அணிந்து இருந்ததால் அவற்றை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கருப்பு நிற உடை அணிந்து செல்ல அனுமதியில்லை என்று கூறி அவர்களை வெளியே நிறுத்தினர். கூட்ட அரங்கிற்கு வெளியே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த அதிகாரிகள், கருப்பு நிற துப்பட்டாவை அணிந்து வந்த மாணவிகளிடம் ‘கருப்பு நிற உடை அணியக்கூடாது’ எனக்கூறி அவற்றை வாங்கி வைத்துள்ளனர். இதையடுத்து மாணவிகள் கருப்பு நிற துப்பட்டாவை கழற்றி வெளியே வைத்துவிட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நீட் போன்ற தேர்வுகளில் மாணவிகள் துப்பட்டா அணிந்து தேர்வு எழுத அனுமதி இல்லை என விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை முதல்வர் மு.க ஸ்டாலின் கடுமையாக எதிர்த்து இருக்கிறார். அப்படி இருக்கையில் அவருடைய நிகழ்ச்சியிலேயே நடைபெற்றதாக சொல்லப்படும் இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்திலும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், “திமுகவுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. என்ன செய்வது என்று தெரியாமல் நம்பிக்கையற்றவர்களாக உள்ளனா். இது எவ்வகை எதேச்சதிகாரம்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.