திமுக வெளிச்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இல்லை: பெ. சண்முகம்!

திமுக வெளிச்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இல்லை என அக்கட்சியின் புதிய மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பதவிக்காலம் முடிவதையொட்டி புதிய மாநிலச் செயலாளராக பெ. சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் பெ. சண்முகம் பேசியதாவது:-

ஊர்வலம், போராட்டம், ஆர்ப்பாட்டம் எல்லாம் இந்திய அரசியல் சாசனம் இந்திய மக்களுக்கு வழங்கியிருக்க கூடிய அடிப்படையான உரிமைகள். இந்த அடிப்படையான உரிமைகளை மறுப்பதற்கு எந்த அரசாங்கத்திற்கும் உரிமை கிடையாது. அன்றைக்கு நடந்தது எங்களுடைய கட்சியினுடைய மாநில மாநாட்டினுடைய பேரணி தான். இந்த பேரணிக்கு கூட விழுப்புரம் மாவட்ட காவல்துறையினர் அனுமதி கொடுக்கவில்லை. இதனால் தான் அப்படி கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஒரு கட்சியினுடைய மாநில மாநாட்டுக்கே பேரணி நடத்த அனுமதி கொடுக்கப்படாததை எக்காரணத்தை கொண்டும் ஏற்க முடியாது. இதற்காக தான் பாலகிருஷ்ணன் தங்கள் கண்டனத்தை தெரிவித்து இருந்தார். இதனை நிச்சயமாக திமுக தலைமை புரிந்துகொள்ளும்.

திமுக கூட நிறைய நேரம் உறவாக இருந்து இருக்கோம். பல நேரங்களில் எதிர் அணியில் இருந்து இருக்கிறோம். வேறொரு அணியில் இருந்து இருக்கிறோம். இவங்களால் தான் எங்களுக்கு வெளிச்சம் கிடைக்கிறது என்று சொல்வதெல்லாம் அதீத வார்த்தை. நிச்சயமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தங்கள் பலத்திற்கு ஏற்ப மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளில் சமரசமற்ற போராட்டத்தை நடத்துவோம். இதன் மூலமாக தான் மக்கள் மத்தியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செல்வாக்கு பெற்ற கட்சியாக இருக்கிறதே தவிர, ஏதோ திமுக கட்சியின் வெளிச்சத்தில் தான் சிபிஎம் செயல்பட்டு வருவதாக திமுக தலைமை, முரசொலியில் செய்தி வெளியிட்டிருப்பது பொறுத்தமானது இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

உழைக்கும் மக்களுக்கு ஆதரவாகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி போராடும். ஜனநாயக முறையில் போராட்டம் நடத்துவோம். மத வெறி சக்திகளை ஒழிக்க திமுகவுடன் இணைந்து சிபிஎம் செயல்படும். மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் நடவடிக்கையில் மத்திய பாஜக அரசு செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.