சிபிஎம் புதிய மாநில செயலாளருக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில புதிய செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சண்முகத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் கட்சியின் மாநில மாநாட்டில், தன்னை பதவிகளில் இருந்து விடுவிக்குமாறு கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை வைத்தார். மேலும், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு சட்ட விதிகளின்படி 72 வயதுக்கு மேல் கட்சியில் எந்த பொறுப்புகளிலும் நீடிக்க முடியாது” என குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி, விழுப்புரம் மாநில மாநாட்டில் இன்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில புதிய செயலாளராக தமிழ்நாடு விவசாய சங்க மாநில தலைவரும், கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விழுப்புரத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாட்டில், 80 உறுப்பினர்கள் சண்முகத்தை தேர்வு செய்துள்ளனர்.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில புதிய செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சண்முகத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI-M) புதிய மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள மதிப்பிற்குரிய தோழர் பெ.சண்முகம் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பொதுவுடைமைப் பாதையில் ஏழை, எளிய மக்களுக்காகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த, போற்றுதலுக்குரிய தங்களின் பணி, வரும் காலங்களிலும் சமரசமின்றித் தொடரட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.