திமுகவின் நிர்பந்தம் காரணமாகத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கும், மாணவிகளுக்கும் தொடர்ந்து நடக்கும் பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், பெண்களுக்கு பாதுகாப்பை வலியுறுத்தியும், பொங்கல் பரிசு தொகுப்பில் 1000 ரூபாய் வழங்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் தேமுதிக சார்பில் இன்று கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யபட்டு பாரிசில் உள்ள தனியார் மண்டபத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த நிர்வாகிகளை தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்தார். கைது செய்யப்பட்டவர்களை சந்திக்க 20 நிமிட காத்திருப்புக்கு பிறகே அனுமதிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் கூறியதாவது:-
ஒரு வார காலமாக அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் போராட்டம் நடத்த காவல்துறை இறுதிவரை அனுமதி கொடுக்கவில்லை. இதனை வன்மையாக கண்டிக்கிறேன். விஜயகாந்த் நினைவு நாள் அன்று கூட அமைதி பேரணிக்கும் அனுமதி கொடுக்கவில்லை. மக்களுக்காக யாரும் பேசவே கூடாதா?.. தேமுதிக, அதிமுக, பாஜக, பாமக யார் போராட்டம் நடத்தினாலும் கைது செய்கிறார்கள், எதிர்க்கட்சிகளின் குரல்வளையை திமுக நசுக்குகிறது. திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது யாரும் உங்களுக்கு அனுமதி மறுக்கவில்லை,நீங்கள் மட்டும் எதற்கு மறுப்பது ஏன்? தமிழக அரசு மினி அவசர நிலை கொண்டு வந்துள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.
எதிர்க்கட்சிகள் ஜனநாயக நாட்டில் கருத்து சொல்ல தான் செய்வார்கள். அன்று 5000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று சொன்னவர்கள், இன்று 1000 ரூபாய் கொடுக்க முடியாதது வெட்கக்கேடு இல்லையா?. வரி வசூல் செய்யும் நிலையில் எங்கே செல்கிறது நிதி? பாண்டிச்சேரியில் 750 ரூபாய் கொடுக்கப்படும் பொழுது தமிழ்நாட்டில் ஏன் கொடுக்க முடியவில்லை. எங்களை அடக்குபவர்கள் பொங்கலுக்கு 1000 ரூபாய் பரிசு தொகை கொடுங்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் திமுகவின் நிர்பந்தத்தின் அடிப்படையில் தான் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஏன் தேசிய கீதம் இரண்டு முறை பாட கூடாதா? ஆளுநர் கேட்பதை அரசு செய்தால் என்ன குறைந்து விட போகிறது. எங்குமே அடக்கி ஆள வேண்டும் என ஸ்டாலின் நினைக்கிறார். 2026 தேர்தலில் மக்கள் திருப்பி அடிப்பார்கள். பள்ளி முதல் பல்கலைகழகம் வரை மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் இனி எங்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாலும் செய்தவர்களை தூக்கில் போட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.