தமிழக மக்களின் நலனுக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார்: செல்வப்பெருந்தகை!

தமிழக மக்களின் நலனுக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார் என குற்றஞ்சாட்டி சட்டப்பேரவையில் இருந்து தமிழக காங்கிரஸ் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

இது தொடர்பாக சட்டப்பேரவைக்கு வெளியே, அக்கட்சியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்ற வந்தபோது ஜனநாயகத்தின் அடிப்படையில் அவருக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறோம். அவர் தொடர்ந்து தமிழகம் மற்றும் தமிழக மக்களின் நலனில் அக்கறை இல்லாத ஆளுநராக இருக்கிறார். அதுகூட பரவாயில்லை, ஆனால் எதிரான நிலையை எடுக்கிறார். மும்மொழிக் கொள்கை, தேசிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு போன்றவற்றை ஆதரிக்கிறார்.

பெரும்பான்மையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சி இருக்கும்போது, மாற்று அரசாங்கத்தை நடத்த துடித்துக் கொண்டிருக்கிறார். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. ஜனநாயகத்துக்கு எதிரானது. தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் துயர சம்பவம் நடந்திருக்கிறது. இதற்கு காரணம் அண்ணா பல்கலை. உள்பட பல பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் இல்லை. துணை வேந்தர் என்பது நிர்வாகத்தின் முதன்மையான பொறுப்பு. அவர் இல்லாததால் இதுபோன்ற தவறுகள் நடக்க ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. எதற்கு துணை வேந்தர்களை நியமிக்க ஆளுநர் மறுக்கிறார்?

இவ்வாறு அவர் எடுக்கும் ஒவ்வொரு செயலும் தமிழக மக்களுக்கு எதிராக இருக்கிறது. தமிழக கலாச்சாரத்துக்கு எதிராக பேசி வருகிறார். அந்தவகையில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை பாஜகவின் ஊதுகோலாக இருந்து ஆளுநர் செயல்பட்டு வருகிறார். இதனால் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக காங்கிரஸ் கட்சியினர் வெளிநடப்பு செய்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.