“ஆளுநருக்கு ஏன் அரசியல். ஆளுநர் அரசியல் பேச வேண்டிய தேவை, அவசியம், நியாயம் இல்லை. கேரளா, மணிப்பூர், பிகார், உள்ளிட்ட மாநிலங்களில் எல்லாம் ஆளுநர்களை மாற்றிய மத்திய அரசே, தமிழகத்தில் மட்டும் ஏன் இவரை சாசனம் எழுதி வைத்தது போல மாற்றாமல் வைத்திருக்கிறது பாஜக” என்று திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரைக் கண்டித்தும், மத்திய அரசின் ஏஜெண்ட்டாக தமிழகத்தின் உரிமைகளில் அத்துமீறல்களைச் செய்யும் ஆளுநரைக் காப்பாற்றிடவும், மத்திய அரசின் மீதுள்ள தமிழக மக்களின் கோபத்தை திசைமாற்றவும் வித்தைகளைச் செய்யும் அதிமுக – பாஜக கள்ளக் கூட்டணியைக் கண்டித்தும் திமுக சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் இன்று செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., எம்.பி.,க்கள் தயாநிதி மாறன், கனிமொழி என்.வி.என்.சோமு, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் தென் சென்னை, வட சென்னை மற்றும் மத்திய சென்னை மாவட்ட திமுக நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்தும், பாஜக மற்றும் அதிமுக-வைக் கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும். அவர் இருந்தால், பாஜகவின் வாக்கு சதவீதம் தமிழகத்தில் இறங்கும். எனவே, அவரை ஆளுநராக இங்கேயே வைத்துக் கொள்ளுங்கள் எங்களுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. ஆர்எஸ்எஸ் பாஜகவின் பரிமாணங்களோடு இருக்கக்கூடிய அந்த கோர முகத்தை தமிழர்களுக்கு ஒவ்வொரு நாளும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கக்கூடியவராக ஆளுநர் இருந்து வருகிறார். எனவே அவர் ஆளுநராக இருப்பதால் எங்களுக்கு பிரச்சினை இல்லை. உங்களது நன்மைக்காக சொல்கிறோம். கடைசியில் ஒரு வாக்கு கூட வாங்கக்கூடாத நிலைக்கு பாஜக வந்துவிடக்கூடாது என்பதற்காகத் தான், ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறி வருகிறார்.
திமுகவும், தமிழக முதல்வர் ஸ்டாலினும் அரணாக நின்று தமிழக உரிமைகளை பாதுகாப்போம். ஒவ்வொரு ஆண்டும் ஆளுநர் வந்து பிரச்சினையை கிளப்பி வருகிறார். ஆளுநர் பதவி என்பது ஒரு ரப்பர் ஸ்டாம்ப். எனவே நீங்கள் வீட்டில் இருங்கள். ஏதாவது திறப்பு விழாவுக்கோ, நிகழ்ச்சிகளுக்கு அழைத்தால் செல்லுங்கள். என்ன பேச வேண்டும் என்பதை புரிந்துகொண்டு பேசுங்கள். இதையெல்லாம் விட்டுவிட்டு ஆளுநருக்கு ஏன் அரசியல். ஆளுநர் அரசியல் பேச வேண்டிய தேவை, அவசியம், நியாயம் இல்லை. ஆனால், ஆளுநர் ரவி தொடர்ந்து அரசியல் பேசிக்கொண்டு, ஒவ்வொரு விஷயத்திலும் பிரச்சினையை கிளப்பிக்கொண்டு , தமிழக அரசை விமர்சித்துக் கொண்டிருக்கிறார். இதைவிட நல்லாட்சி இந்தியாவில் வேறெங்கும் இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் நடத்திக் கொண்டிருக்கிறார். ஆனால், ஆளுநருக்கு திராவிட மாடல் ஆட்சி என்றாலே கஷ்டம்.
கடந்தமுறை திராவிட மாடல் என்ற வார்த்தையைக்கூட சொல்ல மறுத்தவர்தான் இந்த ஆளுநர். காரணம் பயம். திராவிடம் என்றாலே தூக்கத்திலும், கனவிலும் அவர்களுக்கு பயம் வருகிறது. மூன்றாவது ஆண்டாக நேற்று சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறி சென்றிருக்கிறார். கேரளா, மணிப்பூர், பிகார், உள்ளிட்ட மாநிலங்களில் எல்லாம் ஆளுநர்களை மாற்றிய மத்திய அரசே, தமிழகத்தில் மட்டும் ஏன் இவரை சாசனம் எழுதி வைத்தது போல மாற்றாமல் வைத்திருக்கிறது பாஜக. இவ்வாறு அவர் பேசினார்.
இதேபோல், திண்டுக்கல், மதுரை, கோவை, ஈரோடு, திருச்சி, நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் திமுக சார்பில் ஆளுநரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.