திமுகவிற்கு கருப்பு மேல என்ன வெறுப்பு: சீமான்!

சட்டமன்றத்தை விட்டு வெளியேறியதை விட தமிழகத்தை விட்டே ஆளுநர் வெளியேறலாம் எனவும், முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் மாணவிகள் கருப்பு துப்பட்டா அணிய அனுமதி மறுக்கப்பட்டது நிலையில், திமுகவிற்கு கருப்பு மேல என்ன வெறுப்பு என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சட்டமன்றத்தில் தேசிய கீதம் பாடவில்லை என்று கூறி ஆளுநர் வெளியேறியது மரபை மீறிய செயல் சட்டமன்றத்தை விட்டு வெளியேறியதை விட தமிழகத்தை விட்டே ஆளுநர் வெளியேறலாம்.

முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் மாணவிகள் கருப்பு துப்பட்டா அணிய அனுமதி மறுக்கப்பட்டது. திமுகவிற்கு கருப்பு மேல என்ன வெறுப்பு. நீட் தேர்வின் போது செய்த நடவடிக்கைகளுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது. கருப்பு ஆகாது என்றால் திமுக கொடியிலிருந்து கருப்பு நிறத்தை எடுத்து விடுவீர்களா? ஈரோடு இடைத் தேர்தலில் யார் போட்டியிட்டாலும் போட்டியிடாவிட்டாலும் நாம் தமிழர் கட்சி கட்டாயம் போட்டியிடும்.

தமிழ்த்தாய் வாழ்த்தில் உள்ள வரிகளெல்லாம் எங்கே. 10க்கும் மேற்பட்ட வரிகளை நீங்கள் எடுத்துட்டீங்க. நான் மொத்தமா பாட்டையே எடுத்துட்டேன். அவ்வளவுதானே. திராவிடநல் திருநாடு இங்கே ஏன் வருகிறது? திராவிடம் என்ற சொல் என்ன மொழி? தமிழ்த்தாய் வாழ்த்தில் சமஸ்கிருத வார்த்தை வருகிறதா? இல்லையா? தமிழ்த்தாய் வாழ்த்தில் என்ன திராவிடம் வருகிறது. திராவிட நாடு எங்கிருந்தது? உங்கள் வசதிக்கு திராவிட நாடு என்ற வார்த்தை வந்ததால் தமிழ்த்தாய் வாழ்த்தாய் ஆக்கிட்டீங்க. நான் அதிகாரத்திற்கு வந்தால் எங்க தாத்தா புரட்சி பாவலர் பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாய் போடுவேன். அந்த பாட்டை போட்டுக்கிட்டு இருக்கேன்.. உங்களுக்கு என்ன பிரச்சனை என்று சொல்லுங்க.

அரசு விழாவில் நீங்கள் போடாமல் இருங்க.. இது பொது நிகழ்வு..புத்தக வெளியீட்டாளர்கள், பதிப்பாளர்கள் அமைப்பு அரசு கொடுக்கிற பணத்தில் இயங்குகிறது என்றால், அரசுக்கு காசு ஏது? என்னை கண்டிக்கிறீர்கள் இல்லையா? என்னுடைய காசு அதில் இருக்கிறதா? இல்லையா? நான் பேசும்போது முன்னாடி இருந்து கைத்தட்டினார்களே அவர்களுடைய காசு இருக்கிறதா? இல்லையா? தமிழன் காசுதான் இருக்கிறது? நான் இங்கிலீஷ் தாய் வாழ்த்து பாட்டு போட்டேனா? இந்தி தாய் வாழ்த்து போட்டேனா? தமிழ்த்தாய் வாழ்த்துதானே போட்டேன்.. தூயத் தமிழில் எங்கள் புரட்சி பாவலர் பாடிய பாடலை போட்டேன். ரவீந்திரநாத் தாகூர் பாட்டை போட்டேனா? அப்படி ஒன்னும் இல்லலா.. உங்களுக்கு என்ன பிரச்சனை. அந்த பாட்டை போட்டதால் கொட்டகை பற்றி எரிந்ததா? பல பேர் இறந்து போய் விட்டார்களா? அப்படி ஏதும் இருக்கா?

நான் பேசிவிட்டு இறங்கிய பிறகு, கலைஞர் கின்னஸ் என்ற நூலை வெளியிட்டீங்களே.. அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன் எல்லோரும் வெளியிட்டு பேசினார்கள். நானாவது கொஞ்சம் இலக்கியம் பேசினேன். நீங்கள் முழுவதும் அரசியல் பேசினீர்கள். அது என்னது எனச் சொல்லுங்கள். உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? நான் பேசியது தவறு என்றால் நீங்கள் பேசியது எப்படி சரி?. இவ்வாறு சீமான் கூறினார்.