சுயநலவாதிகளான தலைவர்களால் கம்யூனிச கொள்கை தோற்றது: ஆ.ராசா!

சுயநலவாதிகளான தலைவர்களால் கம்யூனிஸ கொள்கை தோற்றது என்று ஆ.ராசா எம்பி பேசியது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

சென்னையில் பச்சையப்பன் கல்லூரில் நடந்த பச்சையப்பன் வாசகர் வட்டம் 7ஆம் ஆண்டு நிறைவு விழாவில் திமுக எம்பியும் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவருமான ஆ. ராசா கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் கம்யூனிஸ்ட்கள் சுயநலவாதிகளாக மாறிவிட்டதாகவும் இதனால் கம்யூனிச கொள்கைகள் நீர்த்துப் போய்விட்டதாகவும் பேசியது அரசியல் அரங்கில் பேசுபொருள் ஆகியிருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் ஆ. ராசா பேசியதாவது:-

சமூகமாக வாழும் மக்கள் அனைவரும் தொழில்களைப் பிரித்துக் கொள்வது என்பதே உலக தத்துவம், ஆனால், இந்து மதத்தில் மட்டும் குறிப்பிட்ட தொழில்களைக் குறிப்பிட்ட நபர்கள் தான் செய்ய வேண்டும் எனப் பிரித்து அதைப் பிறப்போடு வைத்து இருக்கிறார்கள். எனது தாத்தா படிக்காத நபர். அவர் பிழைப்புக்காக இலங்கைக்குப் போனார். எனது அப்பா இலங்கையில் ஆங்கிலம் படித்துவிட்டு இங்கே வந்தார். நான் இப்போது நாடாளுமன்ற உறுப்பினராக உங்கள் முன்பு நிற்கிறேன். இன்று நான் பேசும் ஆங்கிலத்தில் யாராலும் குறை சொல்ல முடியாது. இத்தனைக்கும் நான் தனியார்ப் பள்ளியில் காலை கூட வைத்தது இல்லை. எங்கோ மூலையில் இருக்கும் கல்லூரியில் படித்தேன். இது திராவிடத்தால் மட்டுமே கிடைத்தது. அன்று தீண்டாமையாலும், ஏழ்மையாலும் நாட்டை விட்டு ஓடிய நபரின் மகன் நான். இன்று எனது மகள் சாதி என்றால் என்னவென்றே தெரியாமல் லண்டனில் படித்துக்கொண்டு இருக்கிறார்.

ஸ்டாலின் காலத்தில் ரஷ்யா நீர்த்துப் போனது. ஸ்டாலினுக்குப் பின்னர் குருசேவ், கோர்பசேவ் வந்தனர். பொதுவுடைமைத் தத்துவத்தால் அனைத்து மாகாணங்களையும், தேசிய இனங்களையும் ஒன்றிணைத்து பெரிய ரஷ்யாவை கட்டமைத்து, அதை வல்லரசாக உருவாக்கினார்கள். ஆனால், ரஷ்யா சிதறுண்டு போனதற்கு என்ன காரணம்? கோர்பசேவ் என்ற தலைவர் மோசமானவர். எனவே, தத்துவம் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், அந்த தத்துவத்தைக் கையாளும் அடுத்த தலைமுறை தலைவர்கள் கெட்டவர்களாக இருந்தால், அந்த தத்துவம் தோற்றுப் போகும்.

எப்போதும் தத்துவம் மீது தலைவர்களின் நம்பிக்கை குறையத் தொடங்கினால் தத்துவம் தோற்றுவிடும். கம்யூனிசத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.. இதுவரை கம்யூனிச கொள்கையில் எந்தவொரு கோளாறும் இல்லை.. கம்யூனிசம் செம்மையான கொள்கையாகவே இருக்கிறது. ஆனால், அதை முன்னெடுக்கும் தலைவர்கள் நீர்த்துப் போய்விட்டார்கள். சுயநலவாதிகளாக மாறிவிட்டார்கள். இதனால் மக்களிடையே கம்யூனிச தத்துவங்கள் நீர்த்துப் போய்விட்டது. அதேநேரம் திராவிடம் அப்படி இல்லை. திராவிட தத்துவத்தை நமக்குப் பெரியார் கொடுத்தார். அதைப் பேரறிஞர் அண்ணா அரியணையில் ஏற்றினார். அதன் பிறகு வந்த கருணாநிதியும் திராவிட தத்துவங்களைத் திட்டங்களாகக் கொண்டு வந்தார்.

இத்தனை நாட்கள் அண்ணா போலப் பேச ஸ்டாலினால் முடியுமா? கருணாநிதியைப் போல எழுத ஸ்டாலினால் முடியுமா? எனக் கேட்டார்கள்.. ஆனால், இப்போது அதை விட்டுவிட்டு ஸ்டாலின் போல உதயநிதி உழைத்தாரா? அவருக்கு எதற்குப் பதவி எனக் கேட்க ஆரம்பித்து விட்டனர். எங்கள் தாத்தா கொடுத்த கொள்கையை நாங்கள் பத்திரமாகப் பார்த்துக் கொண்டால் போதும். இன்றைய காலகட்டத்தில் புதிய தத்துவத்தைத் தரும் தலைவர்கள் யாரும் இல்லை. ஆனால் தத்துவத்தைக் காப்பாற்றும் தலைவராக முதல்வர் ஸ்டாலின் உள்ளார். எங்கள் தத்துவத்திற்குச் சேதாரம் இல்லாமல் பார்த்துக்கொள்ளும் இன்னொரு தலைவருமாக உதயநிதி இருக்கிறார். திராவிடம் எப்போதும் தோற்காது. இவ்வாறு அவர் பேசினார்.

ஆ.ராசாவின் கருத்து பற்றி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறும்போது, ‘‘கம்யூனிஸம் குறித்து ஆ.ராசா பேசியது தோழமை சுட்டுதல். திமுக செய்வதற்கெல்லாம் சாமரம் வீசி, கம்யூனிஸம் நீர்த்துப் போய்விட்டது. மக்களுக்காகப் போராட வேண்டிய கட்சி, தற்போது வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறது. திமுக தலைவர்கள், கம்யூனிஸ்ட் கட்சியை அவதூறு செய்கின்றனர். இதையெல்லாம் அவர்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்களா? இதற்காக திமுக கூட்டணியில் இருந்து கம்யூனிஸ்ட் வெளியேற வேண்டும்’’ என்றார்.