“சட்டசபையில் தேசிய கீதம் ஒலிக்க வேண்டும் என ஜனநாயக முறையில்தான் ஆளுநர் கேட்டுள்ளார். ஆனால், திமுக அரசு, ஆளுநர் மீது அவதூறு பரப்பி பொய் பிரச்சாரம் செய்கிறது. ஆளுநரை தரக்குறைவாக பேசும் திமுகவினரின் செயல் கண்டிக்கத்தக்கது” என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழக மக்கள் பொங்கல் விழாவை புகையில்லா பொங்கலாக கொண்டாட வேண்டும். தமிழகத்தில் போகி பண்டிகை பெரிதளவில் கொண்டாடப்படவில்லை என்றாலும், சென்னை, கோவை, மதுரை போன்ற பெரு நகரங்களில் பழைய பொருள்கள் அதிகமாக எரிக்கப்படுகிறது. இதனால், தமிழக முழுவதும் சுற்றுசூழல் மாசு உண்டாகிறது. எனவே, போகிப் பண்டிகையை ஒட்டி, தமிழகத்தில் எந்த பகுதிகளிலும் பழைய டயர், குப்பைகளை எரிப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் மவுனம் காக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், மக்களுடனான போராட்டத்தில் புதிய தமிழகம் கட்சியும் பங்கேற்கும்.
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தமிழக அரசு வெளிப்படையாக இருந்திருக்குமேயானால், புலன் விசாரணையில், ஒரு நபர் தான் குற்றவாளி என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன?. ஞானசேகரன் திமுக-காரர் தான் என்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது. அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில், தமிழக அரசு வெளிப்படை தன்மையோடு இல்லை. அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் உண்மை தன்மை வெளிவர வேண்டும்.
திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, பொங்கல் பண்டிகைக்கு ரூ.5,000 கொடுக்க வேண்டும் என ஸ்டாலின் கூறினார், ஆனால், இன்று ரூ.130 மதிப்புள்ள பொருட்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை போல, பொங்கல் தொகுப்பில் பணத்தை திமுக அரசு தவிர்த்து உள்ளது. சட்டசபையில் நடப்பதை நேரலையில் ஒளிப்பரப்பவில்லை என்றால், உள்ளே என்ன நடக்கிறது என்பது தெரியாமல் போய்விடுமா. திமுக அரசின் அவலங்களை மக்களிடமிருந்து மறைக்க முடியாது.
சட்டசபையில் ஆளுநர் பெரிதாக தவறு ஒன்றும் செய்யவில்லை. தேசிய கீதம் ஒலிக்க வேண்டும் என ஜனநாயக முறையில்தான் கேட்டுள்ளார். ஆனால், திமுக அரசு, ஆளுநர் மீது அவதூறு பரப்பி பொய் பிரச்சாரம் செய்கிறது. ஆளுநரை தரக்குறைவாக பேசும் திமுகவினரின் செயல் கண்டிக்கத்தக்கது. ஆளுநரை கேஷுவல் லேபர் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.