“முன்பு பெரியாரை ஆதரித்தபோது தெளிவு இல்லை. இப்போது தெளிவு வந்துவிட்டது” என்று கூறியுள்ளார் சீமான்.
கடலூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தந்தை பெரியார் தொடர்பாக சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி இருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். சீமானின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், இன்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சென்னை சின்ன நீலாங்கரையில் உள்ள சீமானின் இல்லத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இன்று புதுச்சேரியில் நடக்கும் நாதக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளார் சீமான். புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறியதாவது:-
நம்மில் கீழானவர்கள் என பெரியார் பேசினார். நம்மில் கீழானவர் என்பவர் யார்? இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்களை எதிரிகள் என்று கூறியது யார்? தமிழர் என பேசுபவர்கள் இன எதிரி என கூறியது யார்? தமிழ் பேசும் நாங்கள் யாருக்கு எதிரி? இஸ்லாமியர்களை வேறு நாட்டவர்கள் என்றார் பெரியார். இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் இந்த மண்ணின் பூர்வகுடி மக்கள். மொழி தான் அனைத்தையும் தருகிறது. ஆனால், அந்த தமிழ் மொழியை விட்டு ஒழி என்றார் பெரியார். தமிழர் இல்லாமல் திராவிட இனம் எது? தமிழ், தமிழர் அரசு என்று பேசுவது பித்தலாட்டம் என கூறுவது பெரியார். தமிழர்களாகிய நாங்கள் படிக்காமலா வள்ளுவனின் தொடங்கி பலர் எப்படி வந்தார்கள்? 63 நாயன்மார்கள் குப்பைக்கு சமமானவர்களா?
கல்வியில் சிறந்தது தமிழ்நாடு, கம்பன் பிறந்த தமிழ்நாடு என பாரதி கூறுகிறார். உலகம் போற்றும் பொதுமறையை உருவாக்கிய நாங்கள் அறிவில்லாதவரா? பாரதி, பெரியார் இருவரும் சமகாலத்தவர்கள். அம்பேத்கரும் பெரியாரும் ஒன்றா? அம்பேத்கரையும், பெரியாரையும் எப்படி ஒப்பிட முடியும்? அண்ணல் அம்பேத்கர் உலகின் ஆகச்சிறந்த கல்வியாளர். நான் யாருக்கும் அடிமை இல்லை, எனக்கும் யார் அடிமையும் இல்லை என அண்ணல் கூறினார். பெரியார் தனக்கு தோன்றுவதை எல்லாம் பேசுபவர். பெரியார் தமிழை சனியன் என்றார். தமிழ் மொழியில் தான் அவர் வாழ்நாள் முழுவதும் பேசினார். தமிழ் இனத்திற்கு எதிராக சிந்தித்தவர் பெரியார். பெரியார் சிந்தித்து, பேசியது, எழுதியது எல்லாம் தமிழ் பேரினத்திற்கு எதிரானது.
திராவிடம் என்ற சொல் எந்த மொழி சொல்? ஆரியர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? திராவிடம் என்ற சொல்லையே தான் மனு ஸ்மிருதியில் இருந்து எடுத்துக்கொண்டதாக கால்டுவெல் சொல்கிறார். மனு ஸ்மிருதியில் இருந்து ஒரு சொல்லை எடுத்து அதை வைத்தே ஆரியர்களை வீழ்த்தி விட முடியுமா? நான் கேட்பேன். வரலாற்றிலேயே முதல் முறையாக இப்போதுதான் உண்மையான எதிரியைச் சந்திக்கிறீர்கள். நான் வழிநடந்த பாதை பெரியார், ஆமாம் அது நான் வழிநடந்த பாதை. தமிழ் தேசியம் நான் வழிநடத்தும் பாதை. 2010 மே 15 முதல் இந்தக் கோட்பாட்டில் உறுதியாக இருக்கிறேன். அதில் தடுமாற்றம் இருந்தால் கேளுங்கள். நான் ஏற்றுக்கொண்ட கொள்கைக்கு எதிரியாக இருந்தால் பெரியார் என்றால் என்ன.. யார் என்றாலும் எதிர்ப்பேன்.
பெரியார் என் தாத்தா என்றேன். உண்மை தான். படிக்க படிக்கத் தான் தெரிகிறது, தாத்தா என்பது பேத்தா ஆகிவிட்டது. என் இன சாவில் தான் இவர்கள் என் எதிரி எனத் தெரியவருகிறது. நான் வந்த அடையாளம் இது என தெரியவேண்டும் இல்லையா? அதனால் அவர் படத்தை வைத்திருக்கிறேன். நான் காங்கிரஸில் இருந்தேன். அதில் இருந்து திமுகவுக்கு வந்தேன். அதன்பிறகு என் தலைவனைச் சந்தித்தேன். இதுதான் நீ செய்ய வேண்டிய அரசியல் என அவர் படிப்பித்தார். அதனை நான் கடைபிடிக்கிறேன். திராவிட கூட்டத்தில் இருந்தவன் தான் நான் 2008-ல் என் தலைவரை சந்திக்கும் வரை நானும் இந்தக் கூட்டத்தில் தான் இருந்தேன். அவரை சந்தித்த பிறகு தான் தமிழ் தேசிய அரசியலை தெரிந்து கட்டமைக்கிறேன். 2008ல் தான் திராவிடன் திருடன் என தெரியவருகிறது. 60 ஆண்டுகளாக திராவிடன் திருடியது குருடனாக இருந்ததால் எங்களுக்கு தெரியவில்லை. இப்போது தெளிவாக இருக்கிறோம். பிரபாகரனை சந்திக்கும் முன்பு வரையிலே திராவிடர் என்ற மாயையில் நான் இருந்தேன். ஆனால், இன்று தெளிவாக இருக்கிறேன். திராவிட சித்தாந்தத்தை வெட்டிச் சாய்ப்பதே எங்களின் பணி. திராவிடம் குறித்து படிக்க படிக்கத்தான் திராவிடம் பேசியவர்கள் திருடர்கள் என புரிந்தது. திராவிடம் பேசுபவர்களை ஒழிப்பது, பெரியாரின் கருத்துக்களை எதிர்ப்பதே எனது கொள்கை. இவ்வாறு பேசியுள்ளார் சீமான்.