டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு: பொதுமக்கள் 5,000 பேர் மீது போலீசார் வழக்கு!

டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்துக்கு எதிராக மதுரை நோக்கி 20 கிமீ நடைபயணம் மேற்கொண்டு போராட்டம் நடத்திய 5,000-க்கும் அதிகமானோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்திருப்பதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மதுரை மாவட்ட மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் சுமார் 5,000 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனத்துக்கு இந்த டங்ஸ்டன் சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரிட்டாபட்டி உள்ளிட்ட கிராம மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். தமிழ்நாடு அரசும் சட்டசபையில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. இதனையடுத்து மத்திய அரசு இத்திட்டத்தை தற்காலிகமாக பரிசீலனை செய்வதாக கூறியது. இருந்த போதும் டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்தாக வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கை. இதனால் நாள்தோறும் அரிட்டாபட்டி சுற்றுவட்டார மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதன் அடுத்தகட்டமாக மேலூர் சுற்றுவட்டாரங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 20 கிமீ நடைபயணமாக நடந்து மதுரை தல்லாகுளம் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போலீசார் தடையை மீறி எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் இந்த நடைபயணத்தையும் முற்றுகைப் போராட்டத்தையும் பொதுமக்கள் வெற்றிகரமாக நடத்தி இருந்தனர்.

இந்த நிலையில் போலீசார் அனுமதி இல்லாமல் பேரணி நடத்தியதாக இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற சுமார் 5,000-க்கும் அதிகமான பொதுமக்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தங்கள் மீதான வழக்குகளை போலீசார் கைவிட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.