எதை திசை திருப்ப ஆளுநரை கண்டித்து திமுக போராட்டம்?: எடப்பாடி பழனிசாமி!

எதை திசை திருப்ப ஆளுநருக்கு எதிராக திமுக போராட்டம் நடத்தியது என தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவையில் முதல்வருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே காரசார விவாதம் நடந்தது.

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இந்த ஆண்டின் முதல் கடந்த 6 ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் ஆளுநர் உரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சரியாக காலை 9.30 மணிக்கு வந்த ஆளுநருக்கு சபாநாயகர் அப்பாவு வரவேற்றார். பின்னர் ஆளுநர் ஆர்.என்.ரவி காவல் துறை அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றார். பின்னர் ஆளுநர் உரையாற்ற உள்ளே சென்ற நிலையில் தேசிய கீதம் பாடப்படாததால் உரையை வாசிக்காமல் சட்டசபையை விட்டு ஆளுநர் வெளியேறினார். இதைத் தொடர்ந்து, தமிழக ஆளுநரை கண்டித்து திமுக போராட்டம் நடத்தியது. அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தை கண்டித்து அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர். சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியிருந்ததை நேரலை செய்யவில்லை என திமுக அரசு மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் இன்று சட்டசபையில் ஆளுநருக்கு நன்றித் தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட்டது. அப்போது அதிமுக எம்எல்ஏக்கள் வெள்ளை நிற சட்டையிலேயே வந்திருந்தனர். இந்த அவையில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், கடந்த முறை தமிழர் பெருமைகளை ஆளுநர் படிக்காமல் புறக்கணித்தார். அப்போதெல்லாம் திமுக போராட்டம் நடத்தியதில்லை. ஆனால் தற்போது எதை திசை திருப்ப ஆளுநருக்கு எதிராக திமுக போராட்டம் நடத்தியது? எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தினாலே கைது, வழக்குதான். தமிழ்த்தாய் வாழ்த்தையும், ஆளுநர் வருகையையும் ஏன் நேரலை செய்யவில்லை? அதில் என்ன உள்நோக்கம் இருக்கிறது என கேட்டார்.

அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஸ்டாலின், அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்தால்தான் வழக்கு, கைது. உங்கள் அதிமுக ஆட்சியிலும் இது போன்றுதான் நடந்தது. எதிர்க்கட்சி தலைவர் உடல்நிலையை பேணி பாதுகாக்க வாழ்த்துகிறேன் என்றார்.

எடப்பாடி பழனிசாமி பேசுகையில், கருப்பு சட்டையைக் கண்டு அச்சமா, ஏன் எங்களை நேரலையில் காட்டவில்லை, அதனால்தான் இன்று வெள்ளை சட்டையில் வந்துள்ளோம். நீட் தேர்விலிருந்து இதுவரை விலக்கு பெறாதது ஏன் என கேள்வி எழுப்பினார். அதற்கு முதல்வர் ஸ்டாலின், நீட் தேர்வை நாங்கள் ரத்து செய்வோம், முதல் கையெழுத்து போடுவோம் என நாங்கள் சொல்லவில்லை, ரத்து செய்யும் அதிகாரம் மத்திய அரசிடம்தான் இருக்கிறது. இந்தியா கூட்டணி தேர்தலில் வென்றிருந்தால் நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்றிருப்போம். நீட் தேர்வு வந்ததும் முதலில் எதிர்த்தவர் கருணாநிதிதான் என முதல்வர் தெரிவித்தார்.

அதற்கு எடப்பாடி பழனிசாமியோ அதான் இந்தியா கூட்டணி கலகலத்து போய்விட்டதே, இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும் வாய்ப்பு குறைவு என்றார். அதற்கு முதல்வர், நீங்கள் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தீர்கள், தற்போது விலகி விட்டீர்கள். நாங்கள் இரட்டை வேடம் போடுகிறோம் என்கிறீர்களே, 4 ஆண்டுகள் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள நீங்கள் 4 வேடம் போடவில்லையா என முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார்.