இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ள நிலையில் தூதரக ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக டெல்லிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
தமிழக மீனவர்கள் பிரச்சினை தொடர் கதையாகி வருகிறது. இது வெளியுறவுத்துறை சார்ந்த பிரச்சினை என்பதால் இந்தியா, இலங்கை அரசுகள் உயர்மட்ட அளவில் பேச வேண்டியுள்ளது. ஆனால் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எதுவும் பலனளிக்கவில்லை. இந்த விஷயத்தில் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது மட்டும் நிற்கவில்லை. எனவே மத்திய அரசை வலியுறுத்தி தமிழக அரசு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறது.
டெல்லி சென்று சம்பந்தப்பட்ட அமைச்சர்களை சந்தித்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 இந்திய மீனவர்களையும், அவர்களது மீன்பிடி விசைப் படகையும் கடந்த 08.01.2025 அன்று இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர். இதனை ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருவதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கைது செய்யப்பட்ட 10 மீனவர்களில், 6 மீனவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் (5 பேர் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஒருவர் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்) என்று குறிப்பிட்டுள்ளார்.
மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு மீன்பிடித் தொழிலை மட்டுமே பெரிதும் நம்பியுள்ளதை ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்கள் அறிவார்கள் என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் அவர்கள், இலங்கைக் கடற்படையினர் இதுபோன்று மீனவர்களைச் சிறை பிடிப்பதால், அவர்களது குடும்பத்தினர் மிகுந்த துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 102 மீனவர்களும், 210 மீன்பிடி படகுகளும் இலங்கை வசம் உள்ளதாகவும் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார். எனவே, உரிய தூதரக வழிமுறைகளை முன்னெடுத்து, இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அவர்களை தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை, இலங்கை கடற்படையினர் காங்கேசன்துறை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். அதன் பின்னர், அவர்கள் இலங்கையின் ஊர்க்காவல்படை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அங்கு, தமிழக மீனவர்களை வருகிற 23-ந்தேதி வரை நீதிமன்றக்காவல் விதித்து ஊர்க்காவல் படை நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.