நீட் தேர்வு ரத்து தொடர்பாக தவெக தலைவரும், நடிகருமான விஜய்-ன் அறிக்கை குறித்த கேள்விக்கு, அமைச்சர் சேகர் பாபு கிண்டல் செய்துள்ளார். விஜயை வீட்டிலேயே இருந்து அறிக்கை கொடுக்க சொல்லுங்கள் என்று கூறிய சேகர்பாபு, அவர் வெளியில் வந்தால் யாராவது கோபித்து கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் இருக்கிறது என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அதிமுக தரப்பில் திமுக ஆட்சிக்கு வந்தபின் இரட்டை வேடம் போடுவதாக விமர்சித்தது. தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய், எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அந்த பதிவில், தேர்தலின்போது போலி வாக்குறுதிகள் அளித்து, மக்களை நம்பவைத்து ஏமாற்ற வேண்டும், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பது தான் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணமாக உள்ளது. கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம். நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று பிரச்சாரம் செய்து, தமிழக மக்களை நம்ப வைத்தவர்கள், தற்போதைய ஆட்சியாளர்கள். ஆனால் தற்போது நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் ஒன்றிய அரசிற்குத் தான் உள்ளது. மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்திருப்பது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா? என்று கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கடந்த 3 ஆண்டுகளாக வைகுண்ட ஏகாதசியில் எங்கும் ஒரு சிறிய பிரச்சனை கூட ஏற்படவில்லை. பார்த்தசாரதி திருக்கோயிலில் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் தான் சிறப்பு கட்டண முறை ரத்து செய்யப்பட்டது. யாராக இருந்தாலும் பொது வரிசையில் வந்துதான் பார்த்தசாரதியை தரிசனம் செய்யும் சூழலை ஏற்படுத்தி இருக்கிறோம். எங்குமே ஆகம விதிகள் மீறப்படவில்லை. கோவிலில் எந்த வசதியும் செய்யப்படவில்லை என்று பக்தர்கள் யாராவது புகார் அளித்துள்ளார்களா, யாராவது ஒரு அர்ச்சகர் குறை கூறியிருக்கிறார்களா.. எந்த சலனமும், குற்றச்சாட்டும் இல்லாமல் வைகுண்ட ஏகாதசி அற்புதமாக நடந்து முடிந்துள்ளது. அதனால் அண்ணாமலையின் விமர்சனத்தை பற்றி கவலைப்படவில்லை. அவர் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் பேசி கொண்டிருக்கிறார்.
திமுக ஆட்சி அமைந்த பின், இது ஆன்மீகத்திற்கு எதிரான ஆட்சி என்று பறைசாற்ற நினைத்தார்கள். அதனை தகர்ந்தெறிந்து எல்லோருக்கும் எல்லாம் என்று வகையில் திராவிட மாடல் ஆட்சி நடத்தப்பட்டு வருகிறது. நேற்றைக்கு கூட கொளத்தூரில் பொங்கல் விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முருகன் பாடலை பாடிய சிறுமியை அழைத்து பாராட்டியதாக தெரிவித்தார்.
தொடர்ந்து நீட் தேர்வு குறித்து தவெக தலைவர் விஜய்-ன் கேள்வி குறித்த கேள்விக்கு, அவரை வீட்டிலேயே உட்கார்ந்து அறிக்கை கொடுத்து கொண்டு இருக்க சொல்லுங்கள்.. வெளியே எங்கும் வந்துவிட வேண்டாம்.. அவர் வெளியில் வந்தால் யாராவது கோபித்து கொள்வார்கள் என்று கிண்டல் செய்து சென்றார்.