திமுக மீது கடும் அதிருப்தியை வெளியிட்டு வந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ, திடீரென ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு என அறிவித்துள்ளார்.
திமுக தலைமையிலான கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் இடம் பெற்றுள்ளது. அண்மைக்காலமாக திமுக மீது கடுமையான விமர்சனங்களை சட்டசபைக்கு உள்ளேயும் வெளியேயும் பேசி வருகிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன். ஒருகட்டத்தில் திமுக மீதான அதிருப்தியால் எம்.எல்.ஏ. பதவியையே கூட ராஜினாமா செய்வார் என்கிற பேச்சும் எழுந்தது. இது குறித்து கூறிய வேல்முருகன், தாம் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து இடைத்தேர்தல் நடந்தால் திமுக அமைச்சர்கள் தொகுதி பக்கம் கால் கூட வைக்க முடியாது என எச்சரிக்கையும் விடுத்திருந்தார். திமுக கூட்டணியில் தமக்கு அதிகமான நெருக்கடி கொடுக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டி இருந்தார் வேல்முருகன்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவுக்கு வேல்முருகன் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாட்டில் மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, மாநிலத்தின் வளர்ச்சிக்கு போற்றுதலுக்குரிய வகையில் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் மதவாத அரசியலுக்கு இடமில்லை என்ற கோட்பாட்டில் உறுதியாக நிற்கும் திமுகவிற்கு, மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு இருக்கிறது என்பதை எவராலும் மறுக்க முடியாது. நிதி நெருக்கடிகள் மத்தியிலும் தமிழ்நாடு அரசு, ஏழை, எளிய மக்களுக்குப் பல திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், இந்த இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் சகோதரர் பெரும் வாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். திமுக வேட்பாளர் வெற்றி பெற தமிழக வாழ்வுரிமைக் கட்சி பாடுபடும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். ஈரோடு கிழக்கு தொகுதியில், திமுக வேட்பாளர் வெற்றிக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் களப்பணியாற்றுவார்கள். இவ்வாறு வேல்முருகன் கூறியுள்ளார்.