எடப்பாடி பழனிசாமி இனி “11 தோல்வி பழனிசாமி”: உதயநிதி ஸ்டாலின்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அனைத்து தேர்தல்களிலும் தேல்வி அடைந்து வருவதால் இனி “11 தோல்வி பழனிசாமி” என அழைக்கப்படுவார் என்று துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் கடப்பாக்கத்தில் திமுகவின் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று இருந்தார். அப்போது அவர் பேசியதாவது:-

பொங்கல் பண்டிகை மட்டும் தான் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட பண்டிகை ஆகும். பொங்கல் தமிழரின் பண்டிகை ஆகும். கட்டுக்கதைகளுக்கு வாய்ப்பு கொடுக்காத பண்டிகை என்பதால் சிறப்பான சமத்துவ விழாவை கொண்டாட கூடாது என்பதற்காக பொங்கல் பண்டிகை அன்று மத்திய அரசு தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த ஆண்டும் இதேபோல் தான் தேர்வு நடத்தினார்கள். அதற்கு நமது முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து இருந்தார். நமது பண்பட்டு அடையாளத்தை சிதைப்பது தான் மத்திய அரசின் நோக்கம் ஆகும்.

ஆளுநர் ஆர்என் ரவி மக்களால் தேர்வு செய்யப்படாத ஒருவர் ஆவார். அவரது பதவிக்காலம் முடிந்த பிறகும் பதவியில் உள்ளார். எடப்பாடி பழனிசாமி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை என கூறிவிட்டார். ஏற்கனவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பின்வாங்கினார். தற்போதும் பின்வாங்கி உள்ளார். 2026 சட்டசபை தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமி தோல்வி அடைவார். எனவே இனி 11 தோல்வி பழனிசாமி என்று அவர் அழைக்கப்படுவார். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

இதேபோல் காஞ்சிபுரத்தில் நலத்திட்டங்களை வழங்கும் விழாவில் துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசு தரப்பில் தந்த உரையை புறக்கணித்து சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து எடப்பாடி பழனிசாமி கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. ஆளுநருக்கு வரிந்து கட்டிக்கொண்டு பேசும் இயக்கமாக அதிமுக உள்ளது என்றார்.