கைக்கூலிகள் தமிழகத்திற்கு தேசபக்தி குறித்து சொற்பொழிவாற்றுவது வேடிக்கை: திமுக எம்.பி வில்சன்!

“அரசியல்வாதியாக வேண்டும் என்ற ஆசை இருந்தால் ஆர்.என்.ரவி, ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட வேண்டும். 52 ஆண்டுகளாக தேசியக் கொடியை ஏற்றாத ஒரு அமைப்பின் கைக்கூலிகள் தமிழகத்திற்கு தேசபக்தி குறித்து சொற்பொழிவாற்றுவது வேடிக்கையாக உள்ளது. ” என திமுக எம்.பி வில்சன் காட்டமாக பதில் கொடுத்துள்ளார்.

இந்த ஆண்டிற்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியபோது, சட்டப்பேரவைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, தொடக்கத்தில் தேசிய கீதம் இசைக்கப்படாததால் சிறிது நேரத்திலேயே அவையிலிருந்து வேகமாக வெளியேறினார். ஆளுநர் உரையையே வாசிக்காமல் ஆளுநர் ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியது.அரசியல் தலைவர்கள் பலரும் ஆளுநரின் நடவடிக்கையை விமர்சித்திருந்தனர். முதல்வர் ஸ்டாலின், “தமிழ்நாட்டு மக்களையும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையையும் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. ‘தனது அரசியல் சட்டக்கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்?’ என்பதே அனைவர் மனதிலும் எழும் வினா!” என்று கூறியிருந்தார்.

தமிழக முதல்வர் ஸ்டாலினின் இந்த காட்டமான விமர்சனத்துக்கு ஆளுநர் மாளிகை நேற்று பதில் அளித்தது. ராஜ் பவன் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கீதத்துக்கு உரிய மரியாதையை வலியுறுத்துவதையும், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளை செய்ய சொல்வதையும் அபத்தமானது மற்றும் சிறுபிள்ளைத்தனமானது என்கிறார். பாரதத்தை ஒரு தேசமாகவும் அதன் அரசியலமைப்பாகவும் ஏற்றுக்கொள்ளாத, மதிக்காத ஒரு தலைவராக இருக்கிறார். இத்தகைய ஆணவம் நல்லதல்ல. பாரதமே உயர்ந்த தாய் என்பதையும், அவளது குழந்தைகளுக்கு அரசியலமைப்பே உயர்ந்த நம்பிக்கை என்பதையும் மறந்துவிடாதீர்கள். அவர்கள் இத்தகைய வெட்கக்கேடான அவமானத்தை விரும்பவோ பொறுத்துக்கொள்ளவோ மாட்டார்கள்.” என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆளுநர் மாளிகையின் இந்தப் பதிவுக்கு திமுக கடுமையாக எதிர்வினை ஆற்றியுள்ளது. திமுக ராஜ்யசபா எம்.பியும், மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன், ஆளுநர் ரவியை கடுமையாக விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:-

மேதகு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுக்கு தன்னிலை மறந்துவிட்டதா? ஆளுநர் எனும் பொறுப்பிற்கு அவமானச் சின்னம் அவர். தமிழக அரசையும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களையும் தொடர்ந்து எதிர்முகமாக எண்ணும் அவரது போக்கும், தி.மு.கவுடன் கருத்தியல் மற்றும் அரசியல் போரில் ஈடுபடுவதும் அரசியல் சாசன பதவிக்கு அவர் தகுதியற்றவர் என்பதைக் காட்டுகிறது. Advertisement ராஜினாமா பண்ணிட்டு வாங்க அரசியல்வாதியாக வேண்டும் என்ற ஆசை இருந்தால் அவர் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட வேண்டும். 52 ஆண்டுகளாக தேசியக் கொடியை ஏற்றாத ஒரு அமைப்பின் கைக்கூலிகள் தமிழகத்திற்கு தேசபக்தி குறித்து சொற்பொழிவாற்றுவது வேடிக்கையாக உள்ளது.

எங்களைப் பொறுத்தவரை, இந்தியாவும் தமிழகமும் எங்கள் இரண்டு கண்களைப் போன்றவை – இரண்டும் சம அளவில் முக்கியமானவை. ஒருவரை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் மற்றொருவரை காயப்படுத்துவதில்லை. அதை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது ஆளுநர் ரவி அவர்களே.. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அரசியலமைப்பு கண்ணியத்தை நீங்கள் அவமதித்திருக்கும் போது, அந்த அரசியலமைப்பைப் பற்றி பேச உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை. மாண்புமிகு உச்சநீதிமன்றம் கூட உங்களுக்கு குட்டு வைத்து உங்கள் வேலையைச் சரியாகச் செய்யச் சொல்ல வேண்டியுள்ளது!

மேதகு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் இத்தகைய சட்டவிரோத செயல்களுக்கு ராஜ் பவனில் உள்ள அரசு ஊழியர்கள் உதவுவதைக் கண்டு நான் ஆச்சரியம் கொள்கிறேன். அவர்கள் தமிழ்நாடு அரசின் ஊழியர்கள் என்பதையும், தமிழ்நாடு அரசையோ அதன் கொள்கைகளையோ விமர்சிப்பது, நடத்தை விதிகளின்படி ஒரு அரசுப் பணியாளரை பணி நீக்கம் செய்வதற்கு போதுமான காரணம் என்பதையும் அவர்களுக்கு நினைவூட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.