தமிழக முன்னாள் முதல்வரும் தனது அத்தையுமான ஜெயலலிதாவின் சொத்துகளையும் நகைகளையும் தன்னிடம் ஒப்படைக்கக் கோரி அவருடைய அண்ணன் மகள் ஜெ.தீபா தாக்கல் செய்த மனுவை கர்நாடகா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சொத்து குவிப்பு வழக்கில் கைப்பற்றப்பட்ட ஜெயலலிதாவின் நகைகள் கர்நாடக அரசின் கருவூலத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதை கர்நாடகா அரசு தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தொடர்ந்த வழக்கு கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் கடந்த 7 நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தீபா தரப்பில் 400 பக்கங்கள் அடங்கிய எழுத்துப்பூர்வ கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை ஜனவரி 13 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் இன்றைய தினம் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அதாவது ஜெயலலிதாவின் சொத்துகளை தங்களிடம் ஒப்படைக்க கோரி அவருடைய அண்ணன் மகள் தீபா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சிறப்பு நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் மிகத் தெளிவாக சொத்துகள் அனைத்தும் அரசு பறிமுதல் செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தது. வழக்கில் இணைத்துள்ள சொத்துக்களை தவிர மற்றவை குறித்து மேல்முறையீடு செய்ய உச்சநீதிமன்றத்தை நாட கர்நாடகா உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.