சீமான் பெரியார் குறித்து என்னுடன் விவாதிக்கலாம்: திருமுருகன் காந்தி!

தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கர் குறித்து தம்முடன் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விவாதிக்க தயாரா? என்று மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி சவால் விடுத்துள்ளார்.

தந்தை பெரியாரை இழிவுபடுத்தி தொடர்ந்து பேசி வருகிறார் சீமான். அவருக்கு எதிராக பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். திமுகவின் பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன், பெரியாரை இழிவாகப் பேசுகிறவன் பிறப்பையே நான் சந்தேகிக்கிறேன் என மிக காட்டமாக கூறியிருந்தார். அதேநேரத்தில் சீமானுக்கு ஆதரவாக பாஜக தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சீமான் தங்கள் குரலில் பேசுவதாகவும் பாஜக தலைவர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான் மிக ஆவேசமாக, பெரியார்- அம்பேத்கர் எந்த புள்ளியில் ஒன்றுபடுகிறார்கள்? என்பது குறித்து விவாதிக்க தயார்.. இருகரம் விரித்து விவாதத்துக்கு அழைக்கிறேன் என அழைப்பு விடுத்திருந்தார்.

சீமானின் இந்த சவாலை ஏற்று மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விவாதத்துக்கு தயார் என அறிவித்துள்ளார். இது தொடர்பாக திருமுருகன் காந்தி கூறுகையில், இருகரம் விரித்து விவாதத்திற்கு தயாராக இருப்பதாக பேட்டி கொடுத்து இருக்கிறீர்கள். மகிழ்ச்சி! விவாதத்திற்கு தயாராக இருக்கிறேன் என 4 நாட்களுக்கு முன்பே தொலைக்காட்சி பேட்டியில் பகிரங்கமாக தெரிவித்துவிட்டேன். எங்கே, எப்போது, சந்திக்கலாம் என இடம், தேதியை நீங்கள் முடிவுசெய்கிறீர்களா? அல்லது நான் குறிக்கவா? உங்கள் மொழியில் சொல்வதாக இருந்தால், மானத்தமிழ்ப்பிள்ளையாக இருந்தால், விடுத்த சவாலை எதிர்கொள்ளும் துணிச்சல் இருக்குமென நினைக்கிறேன். நேரடியாக சந்திப்போம், விவாதிப்போம் என அழைப்பு விடுத்துள்ளார்.