பாதுகாப்பான நல்வாழ்விற்கு இருக்கிற இறுதி வாய்ப்பு, அரசியல் விடுதலை மட்டும்தான்: சீமான்!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-

எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
அடிமைப்பட்டு தாழ்ந்து கிடக்கின்ற அன்னை தமிழினத்தினுடைய உரிமை மீட்சிக்கு, எதிர்கால இனத்தின் பாதுகாப்பான நல்வாழ்விற்கு இருக்கிற இறுதி வாய்ப்பு, அரசியல் விடுதலை மட்டும்தான்.

அடிமைப்படுத்தப்பட்ட தமிழ்ப் பேரின மக்கள் தமிழர்களாக ஒன்றிணைந்து ஒரு அரசியல் வலிமையைப் பெற்று அதிகாரத்தைக் கைப்பற்றுவது ஒன்றுதான் நம் இனத்திற்கு இருக்கிற இறுதி வாய்ப்பு. இந்தச் சூழலில் உங்கள் பிள்ளைகள் எளிய மக்கள் நாங்கள் தொடர்ச்சியாகத் தேர்தல் களத்திலே போட்டியிட்டு தமிழின மக்களுக்காக ஒரு வலிமைமிக்க அரசியலைப் கட்டி எழுப்பி வருகிறோம்.

தற்போது ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. போட்டியிடுகிற கட்சிகள் பொருளாதார வலிமையும், கட்டமைப்பு வலிமையும், ஊடக வலிமையும் கொண்டவர்கள் அவர்களை எதிர்த்து கடுமையாகப் போர்புரிவதற்கு இருக்கிற ஒரே வாய்ப்பு உங்கள் பிள்ளைகளின் கடுமையான உழைப்பு மட்டும்தான்.

இத்தேர்தல் பரப்புரைக்குப் போதிய அளவிற்கு நிதி வளமை இல்லாததால் பரப்புரை மேற்கொள்ள நாங்கள் பெரிதும் சிரமப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதேபோன்ற சூழல்களில் முன்பு எப்போதும் எனது அன்புச் சொந்தங்கள் திரள் நிதி திரட்டலில் உங்களால் இயன்ற உதவியைச் செய்து இந்த பொருளாதாரச் சிக்கலைத் தீர்த்து வைத்திருக்கிறீர்கள்.

மாற்றத்திற்கான அரசியலை முன்வைத்து மண்ணையும் மக்களையும் மட்டுமே முழுமையாக நம்பி உண்மையும் நேர்மையுமாக உறுதியுடன் தனித்து களமிறங்கும் நாம் தமிழர் கட்சிக்கு இம்முறையும் உங்களால் இயன்றதைக் கொடுத்து உதவி, உங்கள் பிள்ளைகளை வலிமைமிக்க ஆற்றலாக மாற்றுங்கள்.

துளித்துளியாய் இணைவோம் பெரும் கடலாகும் கனவோடு!

இந்த வருமானம்; காக்கும் நம் இனமானம்!

உங்கள் அனைவருக்கும் என் அன்பு நிறைந்த தமிழ்ப்புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் பொங்கல் நல் வாழ்த்துகள்!

புரட்சி எப்போதும் வெல்லும்!
நமது வெற்றி அதைச்சொல்லும்!

இலக்கு ஒன்றுதான்!
இனத்தின் விடுதலை!

இனம் ஒன்றாவோம்!
இலக்கை வென்றாவோம்! நாம் தமிழர்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.