அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 20 காளைகளை அடக்கி அபிசித்தர் முதலிடம்!

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 20 காளைகளை அடக்கி அபிசித்தர் முதலிடத்தைப் பெற்றார்.

பொங்கல் பண்டிகையையொட்டி, அலங்காநல்லூரில் உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து இன்று தொடக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, அலங்காநல்லூர் கோயில் காளைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. தொடா்ந்து, போட்டியாளா்களின் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டு 9 சுற்றுகளாக இப்போட்டி நடைபெற்றது.

இதில், 20 காளைகளை அடக்கி அபிசித்தர் முதலிடத்தைப் பெற்றார். இவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
14 காளைகளை அடக்கி இரண்டாம் இடம் பிடித்த பொதும்பு ஸ்ரீதருக்கு ஆட்டோ பரிசாக வழங்கப்பட்டது. 10 காளைகளை அடக்கி மூன்றாம் இடம் பிடித்த மடப்புரம் கணேஷுக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது. சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்ட சேலம் பாகுபலி காளையின் உரிமையாளருக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் இடத்தை தவறவிட்ட அபிசித்தர், இந்தாண்டு முதல் இடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலிடம் பெற்ற அபி சித்தரை, சக மாடுபிடி வீரர்கள், நண்பர்கள் உயரே தூக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது செய்தியாளர்கள் சூழ்ந்துகொண்டு அபி சித்தரை பேசுமாறு கேட்டுக்கொண்டனர். அப்போது பேசிய அபி சித்தர், “இந்த வெற்றிக்கு என் நண்பர்கள் தான் முழுக்க முழுக்க காரணம். என் உடன்பிறவா சகோதரர்கள், என் நண்பர்கள் சேர்ந்து தான் என்னை ஆதரித்து வெற்றி பெறச் செய்துள்ளனர்.” என்றார்.

தொடர்ந்து பேசிய அபி சித்தர், “என் நண்பன் விளாங்குடி நவீனுக்காகத்தான் இன்று முதல் பரிசு வென்றேன். அவனியாபுரத்தில் பலியான நவீன் நினைவாக இன்று முதல் பரிசு பெற்றேன். அரசாகப் பார்த்து ஏதாவது செய்தால் நல்லது. அவன் வீட்டுக்கு ஒரே பையன். அவன் இருந்திருந்தால் காலம் முழுவதும் அவனது குடும்பத்திற்கு கவலை இல்லை. அதனை ஈடுகட்டும் வகையில் அரசு செய்தால் நல்லது” எனத் தெரிவித்தார்.

பொங்கல் அன்று நடந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று மாடு முட்டி படுகாயம் அடைந்த மதுரை விளாங்குடி பகுதியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் நவீன் குமார் உயிரிழந்தார். இந்நிலையில், சுமார் 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் கூட பங்கேற்காமல் உயிரிழந்த நவீன் குமார் உடலுக்கு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர்.

கடந்த ஆண்டு முதலிடம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் அமைக்கப்பட்ட பிரமாண்ட ஏறுதழுவுதல் அரங்கத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், அபி சித்தர், 10 காளைகளை அடக்கி முதலிடம் பெற்றார். அதிக காளைகளை அடக்கி முதலிடம் பெற்ற அபி சித்தருக்கு மஹிந்திரா தார் கார் பரிசாக வழங்கப்பட்டது. அதற்கு முன்னதாக உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அதில், முதல் பரிசாக 18 காளையை அடக்கிய மதுரை மாவட்டம் கருப்பாயூரணியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. 17 நாடுகளை அடக்கிய சிவகங்கை மாவட்டம் பூவந்தியைச் சேர்ந்த அபி சித்தர் என்ற வீரருக்கு இரண்டாவது பரிசாக 1.5 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்ட மாடுபிடி வீரர் அபி சித்தர், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கமிட்டி ஒருதலை பட்சமாக நடந்து கொண்டது என குற்றம்சாட்டினார். முதல் பரிசு பெற்ற கருப்பாயூரணி கார்த்திக்கு 3 சுற்றுகள் விளையாட அனுமதி வழங்கப்பட்டது. கமிட்டியிடம் முறையிட்டும் எனக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. எனக்கு கார் தேவை இல்லை. என்னை முதல் இடம் என்று அறிவித்தாலே போதும் என முறையிட்டது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக வழக்கும் தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் சிராவயல் மஞ்சுவிரட்டில் மாடு முட்டி சுப்பையா என்பவர் உயிரிழந்தார். மாடு முட்டியதில் காயமடைந்த சுப்பையா, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிராவயல் மஞ்சுவிரட்டில் 200 பேர் காயமடைந்துள்ளனர், படுகாயம் அடைந்த 3 பேரில் ஒருவர் உயிரிழந்தார்.