ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கில் சென்னை சப்-இன்ஸ்பெக்டர் டேராடூனில் கைது!

சென்னை திருவல்லிக்கேணியில் ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கில் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ராஜா சிங், வருமான வரித்துறை அதிகாரி தாமோதரன் , ஊழியர்கள் பிரதீப் , பிரபு ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சென்னை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சன்னி லாயிடு, டேராடூனில் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்தவர் ஜூனைத். இவர் தொழில் அதிபர் ஆவார். இவரிடம் சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த முகமது கவுஸ் என்பவர் வேலை செய்து வந்தார். ஜூனைத், அண்மையில் முகமது கவுஸிடம் ரூ.20 லட்சம் பணம் கொடுத்துள்ளார். அந்த பணத்தில் மருத்துவ கருவிகளை வாங்கி வருமாறு கடந்த மாதம் சென்னைக்கு முகமது கவுஸை அனுப்பி வைத்தார். அப்போது முகமது கவுஸிடம், ஹவாலா பணமா? என்று மிரட்டி சென்னை ஓமந்தூர் அரசு மருத்துவமனை அருகே ரூ.20 லட்சமும் பறிக்கப்பட்டது. இந்த வழிபறி சம்பவத்தில் யாரோ ஈடுபட்டிருப்பார்கள் என்று நினைத்த போலீசுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ராஜா சிங் (வயது 48), வருமான வரித்துறை அதிகாரி தாமோதரன் (42), ஊழியர்கள் பிரதீப் (41), பிரபு (41) ஆகிய 4 பேருக்கு இதில் தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்டனர். பின்னர், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா சிங் இந்த விவகாரத்திற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதன்பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா சிங் மற்றும் வருமான வரி அதிகாரி தாமோதரனை திருவல்லிக்கேணி போலீசார் 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர்.

விசாரணையில் இந்த வழிப்பறி வழக்கில் சைதாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சன்னி லாயிட்டுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. அதன் பேரில் அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு திருவல்லிக்கேணி போலீசார் சம்மன் அனுப்பினார்கள். ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். இதைத்தொடர்ந்து சைதாப்பேட்டை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சன்னி லாயிட்டை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. சன்னி லாயிட்டின் சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் ஆகும். அங்கு ஒரு தனிப்படை போலீசார் சென்று விசாரித்தனர். இந்த நிலையில் அவர், உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசுக்கு தெரியவந்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் டேராடூன் சென்று சப்-இன்ஸ்பெக்டர் சன்னி லாயிட்டை கைது செய்தனர். பின்னர் அவரை சென்னை அழைத்து வந்தனர்.

இணை கமிஷனர் விஜயகுமார் அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினார். இதில் அவர், உல்லாசம் மற்றும் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கொள்ளையானாக மாறியதாக கூறினார். இந்த வழக்கில் ஏற்கனவே கைதான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜா சிங், வருமான வரித்துறை அதிகாரி, ஊழியர்களுடன் கூட்டணி அமைத்து, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்படும் ‘ஹவாலா’ பணத்தை பறிமுதல் செய்து, அதை உயர் அதிகாரிகளிடம் ஒப்படைப்பதாக கூறி பங்கு போட்டு கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதுது. இதன் மூலம் கிடைத்த பணத்தில் ஜாம்பஜார் பகுதியில் ஒரு அதிநவீன உடற்பயிற்சி கூடம் , சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உல்லாச விடுதி வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதன் காணமாக 3 முறை பணியிடை நீக்க நடவடிக்கையில் சிக்கி இருக்கிறார். தற்போது அவர் 4-வது முறையாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனிடையே கைதான சன்னி லாயிடு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார் என்றும், அதன்பின்னர் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.