காணும் பொங்கலையொட்டி பொது இடங்களில் கூடும் மக்கள் முக கவசம் அணிந்து, தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
காணும் பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கடற்கரை, பூங்கா, திரையரங்கம் உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் அதிக அளவில் திரள்வார்கள். இதையொட்டி, மாவட்ட நிர்வாகங்கள் முன்னேற்பாடுகளை செய்துள்ளன. அதேநேரம், ‘பொதுமக்கள் நோய் தடுப்பு விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக, முதியவர்கள், இணைநோய் உள்ளவர்கள் முக கவசம் அணிந்து, தனி நபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும்’ என்று பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘காணும் பொங்கலை முன்னிட்டு மக்கள் கூடும் இடங்களில் மருத்துவ வசதிகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் முக்கிய இடங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாம்களில் காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு மாத்திரைகள், உப்பு சர்க்கரை கரைசல் போன்றவை கிடைக்கும். பொதுமக்கள் முக கவசம் அணிந்து, தனி நபர் இடைவெளியை கடைபிடித்து காணும் பொங்கலை கொண்டாட வேண்டும்” என்றனர்.