இலங்கையில் ராமேசுவரம் மீனவர்கள் 17 பேருக்கு 3-வது முறையாக காவல் நீட்டிப்பு!

ராமேசுவரம் மீனவர்கள் 17 பேருக்கு 3-வது முறையாக காவலை நீட்டித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமேசுவரத்தில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் 24-ந்தேதி 500-க்கும் மேற்பட்ட படகுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் 2 படகுகளில் சென்ற 17 மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை சிறைபிடித்தது. அவர்களது 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். இவர்கள் அனைவரும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். ஏற்கனவே 2 முறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று 3-வது முறையாக மன்னார் நீதிமன்றத்தில் மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி முகமது ரபீக் மீனவர்களின் சிறை காவலை 3-வது முறையாக நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார். விரைவில் விடுதலை ஆவார்கள் என்று அவர்களது குடும்பத்தினர் எதிர்பார்த்திருந்த நிலையில் மீண்டும் காவல் நீட்டிப்பு செய்துள்ளது மீனவர்களிடையே பெரும் ஏமாற்றத்தை உருவாக்கியுள்ளது.