அ.தி.மு.க. சக்திகள் இணையக்கூடாது என்று கூறுபவர் எடப்பாடி பழனிசாமிதான் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-
பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் இன்று அனைவரின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவ்வாறு இணைந்து எதிர்வரும் தேர்தலில் போட்டியிட்டால் நம்மை வெல்ல யாராலும் முடியாது என்ற சூழல் உருவாகி இருக்கிறது. ஆனால் உலகத்திலேயே எங்கும் இல்லாத கூட்டணியாக ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஒன்றாக இணைந்திருக்கிறது. முதல்-அமைச்சர் எதிர்க்கட்சி தலைவரை பார்த்து, “ஹலோ, ஹலோ சுகமா?” என்று கேட்கிறார். அதற்கு இவர், “ஆம், நீங்கள் நலமா?” என்கிறார். இப்படித்தான் சட்டமன்ற நிகழ்ச்சி போய்க்கொண்டிருக்கிறது. பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. சக்திகள் இணையக்கூடாது என்று கூறக்கூடிய ஒரே நபர் எடப்பாடி பழனிசாமிதான். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.