ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவால் வரும் பிப்ரவரி 5- ஆம் தேதி, ஈரோடு கிழக்கில் 2-ஆவது முறையாக இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 2021 மற்றும் 2023 என ஈரோடு கிழக்கு தொகுதியில் இரண்டு முறை திமுக கூட்டணியில் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை ஆளும் திமுகவே களம் காண்கிறது. திமுக வேட்பாளராக இந்த தொகுதியின் முதல் சட்டப் பேரவை உறுப்பினரான (2011) வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என அறிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள திமுகவின் வேட்பாளர் சந்திரகுமார் இன்று வெள்ளிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்ற நிலையில், இன்று காலையிலேயே நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
முதுநிலை பொதுநிர்வாகம் படித்திருக்கும் சந்திரகுமார், 2011-ல் தேமுதிக வேட்பாளராக ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு, தற்போதைய திமுக அமைச்சராக இருக்கும் முத்துசாமியை வீழ்த்தினார். இந்த நிலையில், தேமுதிக-வில் இருந்து திமுக-வில் இணைந்து, தற்போது திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளராக இருக்கும் சந்திரகுமார், ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமியை எதிர்த்து போட்டியிடுகிறார்.
இதுவரை 9 சுயேச்சைகள் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறது. தேசிய கட்சியான பாஜகவும் தேர்தலில் போட்டி இல்லை என விலகிக் கொண்டுள்ளது. இந்த நிலையில், தவெக-வும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இருந்து விலகுவதாக இன்று வெள்ளிக்கிழமை காலை அறிவித்தது. இதனின்று, ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவும் நாம் தமிழர் கட்சியும்தான் போட்டியிடவுள்ளன.